'இங்கிலிஸ் தன்மையுடைய இந்திய பௌலர்' #HappyBirthdayBhuvaneswarkumar

'இங்கிலிஸ் தன்மையுடைய இந்திய பௌலர்' ஹாப்பி பர்த்டே புவி! இந்திய கிரிக்கெட் சூழல் பொதுவாகவே ஸ்பின்னர்களுக்கு உகந்ததாகத்தான் காலம் காலமாக இருக்கிறது. ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தின் பொலிவுத்தன்மையை போக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். இங்கே ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெற்றிகரமான பெரிய கெரியரை கொண்டிருப்பது கடினமான விஷயமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், 70-80 களுக்கு பிறகு கபில்தேவின் காலத்திலிருந்து இது கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியது எனினும் முழுவதுமாக பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை. இந்தியா இன்னமும் ஸ்பின்னர்களை மையமாகக் கொண்ட நாடாகவே இருந்தது. வேகப்பந்து வீசுவதற்கென்று ஒரு சில வீரர்கள் உருவாகியிருந்தனர் அவ்வளவே. ஆனால், கபில்தேவின் ஓய்வுக்கு பிறகு ஜெவஹல் ஸ்ரீநாத் பிரபலமடைய தொடங்கும் போது இந்த நிலை மாற தொடங்கியது. இந்தியாவுக்கென்று ஒரு வேகப்பந்து வீச்சு முகம் உருவாக தொடங்கியது. அந்த 90 களில் உலகளவில் அதிவேகமாக வீசக்கூடிய பௌலர்களில் ஒருவராக ஸ்ரீநாத் உருவெடுத்தது வேகப்பந்து வீச்சை மேலும் பிரபலமாக்கியது. ஆலன் டொனால்டு, லேன்ஸ் க்ளூஸ்னர், மெக்ராத் ஆகியோரை விடவெல்லாம் ஸ்ரீநாத் வேகமாக வீசியிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக கட்டர்களை பிரதான ஆயுதமாக கொண்டு வெங்கடேஷ் பிரஷாத்தும் மிரட்டினார். ராபின் சிங்கும் மிதவேகத்தை வீசி குறிப்பிட்டளவு பங்களித்தார். இவர்களெல்லாம் 90-2000 வரையிலான ஒரு டிகேடின் இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணியாக இருந்தனர். அடுத்த டிகேடில் ஜாகீர்கான், நெஹ்ரா, அகர்கர், ப்ரவீன் குமார், முனாஃப் படேல் என ஒரு வேகப்பந்து வீச்சு பட்டாளத்தையே இந்திய அணி வைத்திருந்தது. நல்லமுறையில் வேகப்பந்து வீசும் அணியாக இந்திய அணி அறியப்பட்டிருந்தது. கடந்த 30 ஆண்டுகளை மூன்று வெவ்வேறு டிகேடுகளாக பிரித்து பார்த்தால், ஸ்ரீநாத்தில் தொடங்கி ஜாகீர் கான் வழியே வளர்ச்சி பெற்று இந்த டிகேடில்தான் இந்திய அணி தலைசிறந்த வேகப்பந்து வீச்சை கொண்ட அணியாக உருவெடுத்திருக்கிறது. இந்த டிகேடில் தனக்கான வேகப்பந்து குழுவுக்காக இந்திய அணி முதலில் டிக் அடித்த பெயர் புவனேஷ்வர் குமார். அவரிலிருந்துதான் இந்தியா தன்னுடைய தலைசிறந்த வேகப்பந்து வீச்சு குழுவை உருவாக்க தொடங்கியது. 2012-13 இல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில்தான் புவனேஷ்வர் குமார் அறிமுகமானார். அந்த போட்டியின் முதல் ஓவரில் ஹஃபீஸுக்கு புவனேஷ்வர் வீசிய அந்த ஒரு இன்ஸ்விங்கர் மூலம் எடுத்த அந்த விக்கெட்டே அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வேகப்பந்துவீச்சு எப்படி பயணிக்கப்போகிறது என்பதற்கான அறிகுறியாக இருந்தது. சென்னை சேப்பாக்கம் மாதிரியான ட்ரையான பிட்சில் அப்படி ஒரு இன்ஸ்விங்கரை ஒரு இந்திய பௌலர் அதற்கு முன் வீசியிருக்கவே முடியாது. சேப்பாக்கம் பிட்சின் தற்போதைய க்யுரேட்டர் இந்தியா-இங்கிலாந்து போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கும் பிட்ச்சை 'சேப்பாக்க இயல்போடு இங்கிலிஸ் தன்மையுடைய பிட்ச்' என குறிப்பிட்டிருப்பார். புவனேஷ்வர் குமாரையும் கூட நாம் இப்படி 'இந்திய இயல்போடு இங்கிலிஸ் தன்மையுடைய வேகப்பந்து வீச்சாளர்' என குறிப்பிடலாம். அவருடைய சிம்பிளான ரன் அப் ஸ்டைல், வேகம் எல்லாம் மரபான இந்திய வேகப்பந்து வீச்சை நியாபகப்படுத்துவது போலவும் சீமை பிடித்து நியுபாலில் அவர் செய்யும் ஸ்விங் இங்கிலிஸ் தன்மையோடும் இருப்பதாக புரிந்துக்கொள்ளலாம். ஒரு ஸ்விங் பௌலராக நியுபாலில் பேட்ஸ்மேன் கணிக்கமுடியாத வகையில் வீசுவதால் விக்கெட்டுகளை தாண்டி இவரின் எக்கானமியும் சராசரிக்கு குறைவாகவே எப்போதும் இருந்திருக்கிறது. 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்றதற்கு விக்கெட்டுகளுடன் கூடிய இவரின் கட்டுக்கோப்பான எக்கானமியுமே ஒரு காரணமாக இருந்தது. 2015-17 இந்த காலக்கட்டத்தில் புவனேஷ்வர் குமார் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார். ஐ.பி.எல் ல் 2016,17 சீசனில் மட்டும் 49 விக்கெட்டுகளஒ எடுத்திருந்தார். ஆனால், காயம் காரணமாக 2015 உலகக்கோப்பையில் புவனேஷ்வர் குமார் பெரும்பாலான போட்டிகளில் ஆடவில்லை. எல்லா போட்டிகளிலும் வென்ற இந்திய அணி அரையிறுதியில் ஆஸியை கட்டுப்படுத்த முடியாமல் 330 ரன்களை கொடுத்து தோற்றிருக்கும். அந்த போட்டியில் புவனேஷ்வர் இருந்திருந்தால் ஆஸியை கொஞ்சம் இந்திய அணியால் அசைத்து பார்த்திருக்க முடியும். டி20, ஓடிஐ, டெஸ்ட் என அனைத்து ஃபார்மட்களிலும் இந்திய அணிக்காக 5 விக்கெட் ஹால் எடுத்துள்ள ஒரே பௌலர் புவனேஷ்வர்தான். நியுபால் ஸ்விங் பௌலராக அறியப்பட்டாலும் டெத் ஓவர்களிலும் தன்னை வலுவாக மாற்றிக் கொள்வதற்காக யார்க்கர்களையும் ஒரு ஆயுதமாக எடுத்துக்கொண்டார். ஐ.பி.எல் அனுபவம் இந்த விஷயத்தில் அவருக்கு பெரிதாக உதவியது. புவனேஷ்வர் குமாரின் தேர்வு மூலம் இந்திய அணியின் நீளமான டெய்லும் சுருங்கியது. வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களின் கெரியர் தொடக்கத்தில் அவர்கள் வீசும் வேகம் கடைசி வரை நிலைப்பதில்லை. வேகமே பலருக்கும் காயங்களை கொடுத்திருக்கிறது. ஆண்டர்சன், ப்ராட் எல்லாம் இன்னமும் களத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களின் வேகத்தை அவர்களே குறைத்துக்கொண்டதுதான் காரணம். 90 களில் ஸ்ரீநாத் அதிவேகமாக வீசினார் என்றாலும் வேகத்தை குறைக்காததால் காயங்கள் ஏற்பட்டு பெரிதாக அவதிப்பட்டார். காயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் அவரின் கெரியர் இன்னமுமே கூட நீண்டிருக்கும். ஆனால், புவனேஷ்வர் குமார் 150 கி.மீ வேகத்தில் வீசும் பௌலர் இல்லை. அவரின் ரன் அப்பிலும் பெரிதாக எதுவும் வித்தியாசம் இல்லை. சராரியாக 130 கி.மீ ல் தான் எப்போதும் வீசுகிறார். அப்படியிருந்தும் துரதிஷ்டவசமாக தொடர்ந்து காயங்களில் சிக்கி அவதிப்படுகிறார். ஃபார்ம் அவுட், காயம் ஆகியவற்றிலிருந்து மீண்டு வந்து ஐ.பி.எல் ல் சிறப்பாக வீசத்தொடங்கும் போதே மீண்டும் காயமானார். புவனேஷ்வர் குமாருக்கு காயங்களே ஏற்படாது என்று எதாவது வரம் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த டிகேடில் புவனேஷ்வர் குமார் இன்னும் பல சாதனைகளை செய்து மிரட்டியிருப்பார். சீக்கிரமே புவனேஷ்வர் குமார் மீண்டும் வந்து இந்திய அணியில் இடம்பிடித்து ஸ்விங்குகள் மூலம் பேட்ஸ்மேன்களை மிரட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். மீண்டு வாங்க புவி! ஹாப்பி பர்த்டே!!!! - Vj Sriram

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review