பௌலர்களுக்கு உதவும் ஃபுல் லெந்த்...தடுமாறி மீண்ட இந்திய அணி...முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?? #IndVsEng #RohitSharma #Rahane
பௌலர்களுக்கு உதவும் ஃபுல் லெந்த்...தடுமாறி மீண்ட இந்திய அணி...முதல் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?? #IndVsEng #RohitSharma #Rahane
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 300 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஓப்பனரான ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி சதமடித்திருக்கிறார்.
இதே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸை வென்று முதல் பேட்டிங் செய்திருந்தது. அது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், இன்றைய போட்டியில் டாஸுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த முறை இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டார். இதுவே பாதி ஆட்டத்தை வென்றது போன்றதொரு மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.
கடந்த போட்டியில் முதல் 3 நாட்களுக்கு பிட்ச் பௌலர்களுக்கு ஒத்துழைக்கவே இல்லை. பிட்ச்சிலும் ஆங்காங்கே திட்டுத்திட்டாக புற்களும் ஆங்காங்கே வறண்ட பகுதிகளும் இருந்தது. இது பெரிதாக பௌலர்களுக்கு உதவவே இல்லை. இந்நிலையில், இன்றைய பிட்ச்சில் இதை கருத்தில் கொண்டு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. பிட்ச் முழுவதும் ஒரே சீராக வறண்ட பகுதிகளுடனும் வெடிப்புகளுடனும் வழக்கமான சென்னை பிட்ச் போல காட்சியளித்தது. பிட்ச்சில் செய்யப்பட்டிருந்த மாற்றத்திற்கான ரிசல்ட்டை ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. பௌலர்கள் பேட்ஸ்மேன்கள் இருவருக்குமே சம அளவில் ஒத்துழைக்கும் வகையிலேயே பிட்ச் இருந்தது.
இந்திய அணியில் அக்சர் படேல், சிராஜ், குல்தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். வாஷிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணியில் ப்ராட், ஆலி ஸ்டோன், மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைத்திருந்தது.
இந்திய அணியின் சார்பில் ஓப்பனர்களாக ரோஹித்தும் கில்லும் களமிறங்கினர். முதல் ஓவரை ப்ராட் வீசினார். 3 ஸ்லிப், கல்லி, பாயிண்ட் வைத்து கவரை ஓப்பனாக்கி தொடர்ந்து லெக் சைடில் வீசி செட் ஆக்கிவிட்டு அடுத்து ட்ரைவ் ஆடும் லெந்தில் வீசி ரோஹித்தை எட்ஜ் எடுக்கும் திட்டத்தோடு ப்ராட் வீசினார். ஆனால், ரோஹித் கொஞ்சம் தடுமாறினாலும் இதை சமாளித்துவிட்டார். ஆர்ச்சருக்கு பதில் உள்ளே வந்த ஆலி ஸ்டோன் ஆர்ச்சரை மாதிரியே தொடர்ந்து 140+ கி.மீ வேகத்தில் வீசுகிறார்.
அவர் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே கில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த முதல் இரண்டு பந்துகளையுமே வழக்கமான பேட் ஃப்ளோ இல்லாமல் கில் ஒருவித இறுக்கத்துடன் தான் எதிர்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்கம்மிங்காக வீசிய மூன்றாவது பந்தை லீவ் செய்ய நினைத்து பேடில் வாங்கி lbw ஆனார் கில்.
டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஆரம்பத்திலேயே இந்தியா தனது முதல் விக்கெட்டை இழந்தது ஏமாற்றமாக இருந்தது. ஆனால், இதன்பிறகு ரோஹித்தும் புஜாராவும் சேர்ந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
ரோஹித் தொடக்கத்தில் சில ஓவர்கள் தடுமாறினாலும் அடுத்து இங்கிலாந்துக்கு கவுண்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து ட்ரைவ் ஷாட்களின் மூலம் பவுண்டரி வந்து கொண்டே இருந்தது. இடையில் ஸ்டோக்ஸ் ஓவரில் இரண்டு புல் ஷாட்களையும் வேறு அடித்து பவுண்டரியாக்கி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். புஜாரா சிங்கிள் தட்டி ரோஹித்துக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்துக்கொண்டே இருந்தார்.
முதல் டெஸ்ட்டில் ஒரு எண்டில் இடக்கை பேட்ஸ்மேனின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு இடத்தில் கொஞ்சம் அதிக தூசியாக இருந்திருக்கும். இரண்டு அணியின் ஸ்பின்னர்களும் இந்த இடத்தை குறிவைத்து வீசியிருப்பர்.ஒன்றுமே இல்லாத பிட்ச்சில் அந்த இடத்தில் பந்து விழும்போது மட்டும் நல்ல மூவ்மெண்ட் இருந்திருக்கும். நதீம் கூட ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து இந்த இடத்தில் தொடர்ச்சியாக வீசிக்கொண்டே இருந்தார்.
இந்த போட்டியில் அதே மாதிரியாக இரண்டு எண்டிலுமே பேட்ஸ்மேனுக்கு முன்பாக ஃபுல் லெந்தில் முழுவதுமாக தூசி மாதிரி மணல் படிந்திருக்கும் வகையில் செய்திருந்தனர். இந்த லெந்தில் பந்தை வீசும் போது மணல் தெறிப்பதை ஒவ்வொரு முறையும் பார்க்க முடிந்தது. இன்று இந்த லெந்த்தான் இங்கிலாந்து பௌலர்களுக்கு பெரிதாக உதவியது.
ரோஹித்துக்கு லீச் இந்த லெந்தில் பிட்ச் ஆகி வெளியே திரும்புமாறு தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தார். இங்கிலாந்து வீரர்களின் ஆஸ்தான ஷாட்டான ஸ்வீப்பை இந்த முறை ரோஹித் அவர்களுக்கு எதிராகவே ஒரு ஆயுதமாக எடுத்தார். தொடர்ந்து இரண்டு ஸ்வீப் ஷாட்களை ஆடி அரைசதத்தை கடந்தார்.
லீச் மற்றும் மொயீன் அலியின் டெலிவரிக்களில் புஜாராவுக்கு சில ஸ்லிப் கேட்ச்கள் கேரி ஆகாமல் இருந்தது. ஆனால், லீச் வீசிய 21 வது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் புஜாரவை ஸ்லிப்பில் அட்டகாசமாக கேட்ச் பிடித்தார். புஜாரா 21 ரன்களில் வெளியேறினார்.
புஜாரா அவுட் ஆனதை விட கோலி உள்ளே வருவதற்கு ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். ஆனால், கேப்டன் கோலி வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். மேலே குறிப்பிட்ட தூசி படிந்த பகுதியில் 6 வது ஸ்டம்ப் லைனில் மொயீன் அலி வீசிய ஒரு டெலிவரி திரும்பி ஆஃப் ஸ்டம்பை தாக்கியிருக்கும். கவர் ட்ரைவ் ஆட முற்பட்ட கோலி ஸ்பின்னை கணிக்காமல் ஸ்டம்பை பறிகொடுத்தார். இந்தியா பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கு புஜாராவும் கோலியுமே மிகமுக்கிய தேவை. ஆனால், அவர்கள் இருவருமே வெளியேறியதால் முதல் செஷன் முடிவில் இங்கிலாந்து அணியின் கையே ஓங்கியிருந்தது. இந்திய அணி 106-3 என்ற நிலையில் இருந்தது.
முதல் போட்டியில் மைதானம் பெரிய அளவில் பௌலர்களுக்கு உதவவில்லை. ஆனால், இன்று தொடக்கத்தில் இருந்தே பந்து திரும்பியது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா பௌன்ஸும் இருந்தது. கடந்த போட்டியில் 3.3 டிகிரி அளவுக்கே பந்து சராசரியாக திரும்பியிருக்கிறது. ஆனால், இன்று 4.5 டிகிரி அளவுக்கு பந்து திரும்பியிருந்தது. இது இங்கிலாந்து பௌலர்களுக்கும் சாதகமாக இருந்தது.
முதல் செஷனில் 3 விக்கெட் விழுந்திருந்தாலும் இரண்டாவது செஷனில் ரோஹித்தும் ரஹானேவும் விக்கெட்டே விடாமல் சிறப்பாக ஆடினர். ரோஹித் தொடர்ந்து ஸ்வீப் ஷாட்கள் மற்றும் டவுண் தி க்ரவுண்ட் ஷாட்களை ஆடி பந்தை பெரிதாக திரும்பவிடாமல் செய்தார். ரஹானே இன்னொரு எண்ட்டில் பொறுமையாக அதேநேரத்தில் ஏதுவான பந்துகளை பவுண்டரி அடித்தும் ஆடினார். மொயீன் அலி ஓவரில் இறங்கி வந்து லாங் ஆஃபில் சிக்சர் அடித்து 97 ரன்களுக்கு சென்ற ரோஹித் அடுத்த சில ஓவர்கள் பொறுமையாக நின்று மொயீன் அலி ஓவரிலேயே இரண்டு ரன்கள் ஓடி சதத்தையும் நிறைவு செய்தார்.
ரோஹித்-ரஹானே கூட்டணி பொறுப்பை உணர்ந்து இந்த செஷனில் விக்கெட்டை விடாமல் சிறப்பாக ஆடியிருந்தனர். இந்த செஷனில் 83 ரன்கள் கிடைத்திருந்தது. கடைசி செஷனில் ரஹானே அரைசதம் எடுக்க ரோஹித் 150 ஐ தாண்டினார்.
இங்கிலாந்து பௌலர்களும் தொடர்ந்து அந்த தூசி நிரம்பிய ஃபுல் லெந்திலேயே வீசிக்கொண்டிருந்தனர். லீச் வீசிய ஒரு பந்தில் ரோஹித் Front foot இல் ஆட முயன்று ஸ்டம்பிங் ஆகியிருப்பார். கால் க்ரீஸுக்குள் இல்லவே இல்லை. இருந்தாலும் தேர்ட் அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். இது கூட சந்தேகத்தின் பலனாக பேட்ஸ்மேனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ரஹானே லீச் பந்தில் ஷார்ட் லெகில் கேட்ச் ஆனதற்கு முழுமையாக அந்த பந்தை ஓடவிட்டு பார்க்காமலேயே தேர்டு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். ரூட் இதை குறிப்பிட்டு கேட்ட பின்னரும் அம்பயர் lbw க்கு செக் செய்தாரே தவிர கேட்ச்சுக்கு மீண்டும் செக் செய்யவில்லை. இது மிகப்பெரிய தவறான முடிவு. மேக்ஸ்வெல் உட்பட பல பிரபலமான கிரிக்கெட் வீரர்களை இது குறித்து டீவிட் செய்திருக்கின்றனர்.
ஆனால், இந்த இரண்டு தவறான முடிவுகளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதன்பிறகு சீக்கிரமே ரோஹித்தும் ரஹானேவும் அவுட் ஆகிவிட்டனர். லீச் பந்தில் ஸ்வீப் ஆடி டீப்பில் கேட்ச் ஆகி 161 ரன்னில் ரோஹித் வெளியேறினார். ரஹானே மொயீன் அலி பந்தில் ஒரு ஸ்வீப் ஆட முயன்று போல்டை பறிகொடுத்தார். ரோஹித் மற்றும் ரஹானேவின் 162 ரன் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தை இந்தியா பக்கமாக திருப்பியது.
இதன்பிறகு ரூட் ஓவரில் அஸ்வின் ஷார்ட் லெகில் அவுட் ஆகி வெளியேறிவிட அக்சர் படேலும் ரிஷப் பண்ட்டும் ஆடிக்கொண்டிருந்தனர். ரிஷப் பண்ட் வழக்கம்போல ஸ்பின்னர்களை அட்டாக் செய்து பவுண்டரியும் சிக்சரும் அடித்து நாட் அவுட்டாக இருக்கிறார். இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 300-6 என்ற நிலையில் உள்ளது.
நாளை இந்திய அணி குறைந்தபட்சம் ஒரு 50 ரன்களையாவது சேர்க்க வேண்டும். பிட்ச் ஸ்பின்னர்களுக்கு பெரிதாக உதவுவதால் அஸ்வின், அக்சர், குல்தீப் மூவரும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
- Vj Sriram
Comments
Post a Comment