தோற்பதற்கென்றே கட்சி நடத்துகிறாரா சீமான்?? #Seeman #NTK

தோற்பதற்கென்றே கட்சி நடத்துகிறாரா சீமான்?? 1949 இல் தி.மு.க தொடங்கப்பட்டு 1967 இல் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கு இடைப்பட்ட 18 ஆண்டுகளில் அந்த கட்சி எப்படி உருப்பெற்று வளர்ந்தது என்பதை உன்னிப்பாக பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க மேடைப் பேச்சுகளின் மூலமே அந்த கட்சி தமிழகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் மட்டும் 2035 பொதுக்கூட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. பேசியே பேசியே வளர்க்கப்பட்ட கட்சி என்கிற பெயரும் தி.மு.க வுக்கு உண்டு. தி.மு.க வுக்கு பிறகு எந்த கட்சியும் அப்படி பேச்சை மட்டுமே அடிப்படையாக வைத்து வளர்ந்ததாக தெரியவில்லை. மக்களை ஈர்க்கும் வகையில் பேச்சாற்றல் உடைய தலைவர்கள் தனிக்கட்சி கண்டிருந்தாலும் அவர்களுக்கும் பெரிய செல்வாக்கு உண்டானதாக தெரியவில்லை. நீண்ட நெடுங்காலத்துக்கு பிறகு பேச்சின் மூலம் மட்டுமே ஒரு கூட்டத்தை கட்டிப்போட்டிருக்கும் கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். அந்த கட்சி ஈழப்பிரச்சனையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி என்றாலும் இன்றைக்கு அந்த கட்சிக்கென்று ஒரு கூட்டம் கூடியிருக்கிறதென்றால் அதற்கு அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரை ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் பேசும் அவரது தம்பிகளின் மேடைப்பேச்சுமே மிக முக்கிய காரணம். முதல் முறை வாக்காளர்கள் மற்றும் 30 வயதிற்குள் இருக்கும் இளம் வாக்காளர்கள் இவர்களுக்கு ஏற்கனவே ஆட்சியிலிருந்த கட்சிகள் மீதும் மூத்த தலைவர்கள் மீதும் இயற்கையாகவே ஒரு ஒவ்வாமை இருக்கிறது. புதிதாக வருகிற ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற சினிமாத்தனமான புரட்சியும் இந்த வயதுக்காரர்களிடம் அதிகம் இருக்கிறது. இப்படியான வாக்காளர்கள் முன்பு சீமான் மாதிரியானவர்கள் பேசும் போது எளிமையாக கவரப்பட்டு விடுகிறார்கள். சீமான் அளவுக்கு இளம் வாக்காளர்களை கவரும் அளவுக்கு பேசும் கட்சித்தலைவர்கள் வேறு யாரும் இங்கே இல்லை என்பதே நிதர்சனம். எனவே, இயல்பாகவே மாற்றத்தை விரும்பும் இளம் வாக்காளர்களின் தேர்வாக சீமான் எப்போதும் இருக்கிறார். அவர் விதைக்கும் கருத்தியல் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அதை நம்பி இன்றைக்கு அவர் பின்னால் நிற்பதற்கு ஒரு இளைஞர் கூட்டமே இருக்கிறது என்பதும் நிதர்சனம். இவர்கள்தான் சீமானின் மூலதனம். சீமானின் மீது தொலைக்காட்சி ஊடகங்களும் செய்தித்தாள்களும் பெரிதாக கவனம் செலுத்துவதே இல்லை. இணைய ஊடகங்கள் மூலம் மட்டுமே அவரின் பேச்சுகள் பரப்பப்படுகிறது. இணையத்தில் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ட்ரெண்டிங்கில் எப்போதும் சீமான் வீடியோக்களே இருக்கின்றன. இணையம் வளர வளர இளைஞர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்கத்தான் சீமானும் வளருகிறார் என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றது. 2011 இல் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் எதிர்பிரச்சாரம் செய்தது. போட்டியிடவில்லை. 2014 இல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என அ.தி.மு.க ஆதரவு பிரச்சாரம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு 2016 இல் தான் நேரடி தேர்தல் களத்திற்கு வருகிறார் சீமான். 50% தொகுதிகளில் பெண்கள், ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு திருநங்கை வேட்பாளர் என சில புதிய யுக்திகளை சீமான் பயன்படுத்தினார். மாற்றத்தை விரும்பிய இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு ஆதரவு வட்டம் உருவானது. அதன்மூலம் 1% வாக்குகளை மட்டும் நா.த.க பெற்றது. சீமானே கடலூர் தொகுதியில் டெபாசிட் இழந்து போனார். அப்படியிருந்தாலும் சீமானின் உறுதியான நிலைப்பாடுகள் மூலம் கட்சி தொடர்ந்து வளர்ந்ததை பார்க்க முடிந்தது. விளைவாக, 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டிக்கு கமல்ஹாசன் இருந்தும் 4% வாக்குகளை பெற்றுவிட்டார். வரவிருக்கிற 2021 தேர்தலில் சீமான் என்ன செய்யப்போகிறார்? ஆட்சியை பிடிக்கப்போகிறோம் என்றுதான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் அது சாத்தியப்படுமா? நிச்சயமாக சீமானால் இந்த தேர்தலில் இல்லை அடுத்த தேர்தலிலும் கூட ஆட்சியை பிடிக்க முடியாது. இப்போது இருக்கும் 4% வாக்கு வங்கி 6% க்கு மேல் பெருகுமே தவிர சீமானால் ஆட்சியை பிடிக்க முடியாது. காரணம், அவரின் பிரச்சார முறை. ஜம்மு கஷ்மீர் மாதிரி நினைத்தால் மாதக்கணக்கில் இணையத்தொடர்பை துண்டித்துப்போடும் வாய்ப்பு தமிழகத்தில் இருந்தால் சீமானின் கட்சி இரண்டே மாதங்களில் அவர்கள் வைத்திருக்கும் 4% வாக்குகளையும் இழந்துவிடும். அந்தளவுக்கு இணையத்தை மட்டுமே சார்ந்திருக்கிறது அவரது கட்சி. சீமான் என்றாவது தெரு தெருவாக இறங்கி வந்து ஓட்டுக் கேட்டு பார்த்திருக்கிறீர்களா? வேன் பிரச்சாரமாவது செய்து பார்த்திருக்கிறீர்களா? முடியவே முடியாது. அவர் இதுவரை அப்படி செய்ததே இல்லை. எதோ ஒரு ஊரில் தெருவோரமாக மேடை போட்டு உணர்ச்சிப்பொங்க பேசிவிட்டு சென்றுவிடுவார். அந்த காணொலி இணையத்தில் வைரலாகும் அவ்வளவே. இதுதான் நா.த.க வின் தேர்தல் பிரச்சாரம். 4% ஓட்டு வாங்குவதற்கு இந்த முறை போதும். ஆனால், வெகுஜனங்களை கவர்ந்திழுந்து பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கு இதெல்லாம் போதவே போதாது. மக்களை தெருத்தெருவாக வீடுவீடாக இறங்கிப்போய் சந்திக்க வேண்டும். வாக்களர்களுடன் முடிந்த வரைக்கும் நேரடி தொடர்பை உண்டாக்க முயற்சிக்க வேண்டும். நாம் இங்கே சொல்லும் திட்டத்தையெல்லாம் காப்பியடித்து ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி செய்கிறார் என சீமான் பெருமிதமாக பேசுகிறாரே அந்த ஜெகன் மோகன் ரெட்டி எப்படி வென்றார் தெரியுமா? ஊர் ஊராக கிராமம் கிராமமாக பாதையாத்திரை சென்று எவ்வளவு மக்களை சந்திக்க முடியுமோ அவ்வளவு மக்களை சந்தித்தார். அதன்மூலமே சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தினார். ஸ்டாலினுக்கு தமிழகத்தில் அறிமுகம் வேண்டுமா? இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் திண்ணைப் பிரச்சாரம், கிராமசபைக் கூட்டம் என கிளம்பிவிடுகிறார். இதற்கு பின்னால் இருக்கும் உளவியலையும் புரிந்துக்கொள்ள வேண்டும். மக்கள் தாங்கள் எட்டவே முடியாத இடத்தில் இருப்பவர் என நினைத்துக் கொண்டிருக்கும் தலைவர்கள் அவர்களாகவே நேரில் வீடு தேடி வந்து வாக்கு கேட்கும்போது நிச்சயம் அந்த மக்களால் மறுதலிக்க முடியாது. இந்த இடத்தில்தான் சீமான் சறுக்குகிறார். வெறுமென மேடைகளில் மட்டும் பேசி அதை இணையத்தில் பரப்பினால் போதுமென நினைக்கிறார். அது போதவே போதாது. அவர் அப்படி நினைப்பதால் அவருடைய தம்பிகளும் களத்திற்கு வந்து வெகுவாக வாக்கு சேகரிப்பதில்லை. ஜெயலலிதாவும் கருணாநிதியும் கடைசிக்காலக்கட்டங்களில் அப்படி இறங்கி பிரச்சாரம் செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் நலமாக இருந்த காலத்தில் அப்படி இறங்கிப் போய்தான் பிரச்சாரம் செய்திருக்கின்றனர். சீமான் களத்தில் இறங்க வேண்டும்....தெருத் தெருவாக வீடு வீடாக சென்று வாக்கு கேட்க வேண்டும். . நா.த.க இளைஞர்களை தாண்டி பெண்கள், கிராமத்தினர், வயதானவர்கள் ஆகியோரை கவர வேண்டுமெனில் தங்கள் பிரச்சார யுக்தியை மாற்றியே ஆக வேண்டும். இல்லையேல் அவர்களின் கனவு பலிப்பதற்கான சாத்தியம் குறைவுதான். போட்டா போடுங்க போடாட்டி போங்க என்கிற பேச்செல்லாம் எடுபடவே செய்யாது! இனியும் சீமான் அப்படியே பேசிக்கொண்டிருந்தால் ரிசல்ட்டை முன்பே தெரிந்துக்கொண்டு சம்பிரதாயத்துக்கு கம்பு சுற்றுகிற நபராகத்தான் சீமான் பார்க்கப்படுவார். - உ.ஸ்ரீ #சீமான் #Seeman #NTK

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review