சூர்யகுமார் யாதவ் - இந்திய அணி தவறவிடக்கூடாத டி20 பேட்ஸ்மேன்!

சூர்யகுமார் யாதவ் - இந்திய அணி தவறவிடக்கூடாத டி20 பேட்ஸ்மேன்! #IndVsEng #SKY முதல் போட்டியில் டக் அவுட் ஆன பிறகு, இரண்டாவது போட்டிக்கு முன்பாக டீவில்லியர்ஸிடம் சில ஆலோசனைகளை கோலி பெற்றிருக்கிறார். அதன்பிறகு நடந்த இரண்டு போட்டிகளிலுமே வெளுத்தெடுத்துவிட்டார். கோலி மாதிரியான லெஜண்ட்டை இன்னொரு வீரரிடம் ஆலோசனை பெற வைக்கும் அளவுக்கு இங்கிலாந்து என்ன செய்தது? ரூட் மாதிரி இந்திய பிட்ச்களுக்கு அணியை தகவமைக்க முடியாமல் மோர்கன் திணறவில்லை. மோர்கன், ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச், இந்திய சூழல் இவற்றையெல்லாம் மனதில் வைத்துக் குழம்பிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் அணியின் பலம் என்ன? அதைவைத்து இந்தியாவை என்ன செய்யலாம்? என்பது பற்றி மட்டுமே யோசித்தார். தனது வேகப்பந்து வீச்சாளர்கள் மீது மட்டுமே முழுநம்பிக்கையையும் வைத்தார். அவர்களின் திறனே இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிக்க போதும் என நம்பினார். அதனால்தான், ஒரே ஒரு ஸ்பின்னரோடு அஹமதாபாத் பிட்ச்சில் தைரியமாக களமிறங்கினார். அவருடைய நம்பிக்கையை பொய்யாக்காத வகையில் இங்கிலாந்து வேகங்களும் பிட்ச்சை குறை கூறாமல், தங்களது வேரியேஷன்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தினர். லைன், லெந்த், வேகம் இவற்றில் இங்கிலாந்து பௌலர்கள் காட்டும் வேரியேஷன் தான் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தது. எப்போதும் 140+ இல் மிரட்டும் ஆர்ச்சர் இங்கே ஒரு பந்தை 140+ இல் ஷாட்டாக வீசினால் அடுத்த பந்தை 120+ இல் குட்லெந்த்தில் வீசுகிறார். இந்த வேரியேஷன் இந்திய வீரர்களை தட்டுத்தடுமாற செய்கிறது. நேற்றைய போட்டியில் ரோஹித்தின் விக்கெட்டை கவனித்தவர்களுக்கு இது புரிந்திருக்கும். லெந்தை பொறுத்தவரை கடந்த போட்டிகளில் பெரும்பாலான பந்துகளை ஷாட்டாக வீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அடில் ரஷீத் கூட கூக்ளியையும் லெக் ப்ரேக்கையும் மாற்றி மாற்றிதான் வீசுகிறார். இந்த வேரியேஷன்கள்தான் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தது. கோலியை ஏபிடியிடம் ஆலோசனை பெறவும் வைத்தது. இந்த மாதிரியான வேரியேஷன்களை வீரியமாக பயன்படுத்தும் பந்துவீச்சுக் கூட்டணிகளை எதிர்கொள்ள ஒரு பேட்ஸ்மேன் அதீத சுதாரிப்புடன் இருக்க வேண்டும். பௌலரின் ஒவ்வொரு வேரியேஷனையும் tackle செய்யும் வகையில் ப்ரத்யேகமான ஷாட்கள் இருக்க வேண்டும். ஏபிடி இந்த விஷயத்தில் வித்தைக்காரர். பௌலர் எப்படி வீசினாலும் அதை பவுண்டரியாக்கக்கூடிய ஒரு ஷாட் அவரிடம் எப்போதுமே இருக்கும். ஏபிடியின் ஆலோசனைக்கு பிறகு, கோலியின் பேட்டிங்கிலும் அப்படியான ஷாட்களை பார்க்க முடிந்தது. சூர்யகுமார் இங்கேதான் முக்கியத்துவம் பெறுகிறார். அவர் எந்த ஏபிடியிடமும் ஆலோசனை பெறவில்லை. ஆனால், அவரிடம் இங்கிலாந்து வீரர்களின் ஒவ்வொரு வேரியேஷனுக்கு எதிராகவும் ஒவ்வொரு ஷாட் இருந்தது. ஆர்ச்சர் 140+ இல் வீசிய முதல் பந்தை முதல் போட்டியில் ஆடும் வேறு எந்த வீரரும் அப்படி ஒரு சிக்சராக மாற்றியிருப்பார்களா? என்பது சந்தேகமே. ஆனால், சூர்யகுமாரால் க்ரீஸை முழுமையாக பயன்படுத்தி அப்படி ஒரு ஷாட்டை ஆடி ஃபைன் லெகில் சிக்சராக்க முடிந்தது. ரஷீத்தின் கூக்ளிக்களை ஸ்வீப் ஆட முடிந்தது. வேகம் குறைந்த கட்டர்களை ஆஃப் சைடில் பவர் கொடுத்து அடிக்க முடிகிறது. அவர் அவுட் ஆன சாம் கர்ரன் ஓவரில் கூட வித்தியாசமாக முட்டி போட்டு ஃபைன் லெகில் சிக்சராக்கியிருப்பார். டி20 போட்டிகளில் 7-15 மிடில் ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட் மிகக்குறைவாகவே இருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு இந்த மிடில் ஓவர் ரன்ரேட் எவ்வளவு முக்கியம் என்பது பற்றி ஹர்ஷா போக்ளே கமெண்ட்ரியில் பேசியிருந்தார். இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமாயின் மிடில் ஓவரில் இந்தியா இன்னும் அதிரடியாக ஆட வேண்டும். அதற்கு இப்படி பௌலர் லைன், லெந்த், வேகம் என எப்படி மாற்றி மாற்றி வீசினாலும் சமாளித்து ஆடும் ஷாட் ஆப்சன்கள் உள்ள ஒரு பேட்ஸ்மேன் உறுதியாக தேவை. சூர்யகுமார் யாதவ் அந்த மிடில் ஓவர் பிரச்சனையை முழுவதுமாக தீர்ப்பார் என்கிற நம்பிக்கை, நேற்றைய அவரின் ஆட்டத்தின் மூலம் மேலும் கூடியிருக்கிறது. #SuryaKumarYadav - உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz