யாருக்கு சார் ஓட்டு போடுறது?
யாருக்கு சார் ஓட்டு போடுறது?
தேர்தல் வந்தாச்சு...ஓட்டு போடுற நேரமும் நெருங்கியாச்சு...அதிகபட்சம் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. ஆனால், யாருக்கு என்னுடைய வாக்கை செலுத்துவது என்று மட்டும் இன்னும் முடிவாகவில்லை.
அ...வின் ஆட்சியை கொடுப்போம் என கூறுகிறார்கள். அந்த அ....வே மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக ஊழல் வழக்கில் உள்ளே சென்று கம்பி எண்ணியவர். அவருடைய ஆட்சியை கொடுக்கிறோம் என்பது கேவலத்திலும் கேவலம்.
ஒரு கட்சி 10 வருடமாக ஆட்சியிலிருந்து ஒன்றையும் சாதிக்கவில்லை. 10 வருட ஆட்சி முடிந்த பிறகு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என்கிற வாக்குறுதியோடு தேர்தலை சந்திக்கிறது. இது இந்த 10 வருடத்தில் வேலைவாய்ப்புக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்பதை அவர்களே ஒத்துக்கொள்வது போல இருக்கிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியையே டிவியில் பார்த்து தெரிந்துக்கொள்ளும் அளவுக்கான அப்பாவி முதலமைச்சரை தமிழக அரசியல் இதுவரை சந்தித்ததில்லை. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய பன்னீர் செல்வம் இன்று சசிகலாவுக்கு 'தூய ஆத்மா' பட்டம் கொடுக்கிறார். சசிகலாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்ட எடப்பாடியோ சசிகலாவுக்கும் அந்தக் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்கிறார். பதவி வெறிக்காக நரம்பில்லாத நாக்குகள் எப்படி நாட்டியம் ஆடுகிறது பாருங்கள். பதவி என்று வந்துவிட்டால் ஊழல் குற்றவாளி என்றும் பார்க்கமாட்டார்கள் மதவெறியர்கள் என்றும் பார்க்கமாட்டார்கள் நெடுஞ்சாண் கிடையாக நீட்டி நிமிர்ந்து காலில் விழுந்துவிடுவார்கள். தமிழகத்தின் எதிர்காலம் குறித்து யோசிக்காமல் யார் காலில் விழுந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம் என நொடிக்கு நொடிக்கு யோசித்து தமிழ்கத்தையே கேலிக்கூத்தாக்கி வைத்திருக்கும் அந்த கட்சிக்கு எப்படி என்னுடைய வாக்கை செலுத்த முடியும்?
இவர்களை எதிர்ப்பதற்கென்று தமிழகத்தில் இன்னொரு கட்சி இருக்கிறது. இன்றைய தேதிக்கு தமிழகத்தில் புனிதமான உத்தமமான மானமுள்ள அப்பழுக்கற்ற ஒரே கட்சி அந்த கட்சிதான். 24 மணி நேரமும் மக்கள் நலனுக்காகவே சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே கட்சி அந்த கட்சிதான். தமிழகத்திற்கு விடியலை வாங்கித்தரப்போவதும் அந்த கட்சிதான். தமிழகத்தை வல்லரசாக்கப்போவதும் அந்த கட்சிதான்.
இப்படியெல்லாம் அவர்களுக்கு அவர்களே புகழாரம் சூட்டிக்கொள்வார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகுதான் அவர்களின் சுயரூபம் தெரியும். மளிகைக் கடைக்காரரிலிருந்து மல்டிமில்லியனர் வரை அந்த கட்சியை பார்த்து அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். 'அவனுகக் கூட கமிஷன் தான்ப்பா கேப்பானுக..இவனுக கம்பெனியவே எழுதி வாங்கிட்டு போயிருவானுக' என இப்போதே மக்கள் குலைநடுங்கி போயிருக்கின்றனர். பத்து வருடம் ஆட்சியிலேயே இல்லாத ஒரு கட்சி மீது மக்களுக்கு இப்படி ஒரு வெறுப்புணர்வு இருக்கிறது என்றால் அவர்கள் எப்படிப்பட்ட ஜகஜால கில்லாடிகளாக இருப்பார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட சமூக நீதி....சமத்துவம்...பெண்ணுரிமை என கொக்கரிப்பார்கள். ஆனால், கடந்த முறை இவர்கள் ஆட்சியிலிருந்த போதுதான், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மின்வெட்டை உண்டாக்கி அவர்கள் பேசிய அத்தனையையும் அவர்களே கபளீகரம் செய்தார்கள். மின்வெட்டால் எந்த தொழிலும் செய்ய முடியாத நிலை உண்டாகி, வேலைவாய்ப்பு திண்டாட்டமானது. பெண்கள் நிம்மதியாக தெருவில் நடமாட முடியாது. மாணவர்கள் உருப்படியாக ஒரு தேர்வுக்கு படிக்க முடியாது. ஆளுக்கு இரண்டு மெழுகுவர்த்தி வாங்கிக்கொண்டு டியுசனுக்கு சென்ற சம்பவமெல்லாம் இன்னும் பசுமரத்தாணி போல நியாபகம் இருக்கிறது. கூலி வேலைக்கு சென்று திரும்பியவர்கள் நிம்மதியாக கண்ணசர கூட வழியில்லாமல் இருந்தது.
சரி, அதையெல்லாம் விட்டுவிடுவோம் அதெல்லாம் பழைய விஷயம். இப்போது அந்த கட்சித் தலைவரின் மகன் அரசியலில் குதித்துள்ளார். மொக்கை காமெடியோடு 4 ஓடாத படத்தில் நடித்தார் என்கிற அதிகபட்ச தகுதியின் அடிப்படையில் அவருக்கு கட்சியில் ஒரு முக்கியப் பதவி அளிக்கப்பட்டது. இப்போது, இந்த தேர்தலிலும் நிற்கிறார். வெற்றி பெற்றால் துணை முதல்வராக கூட வருவார். அடுத்த முறை முதல்வராக கூட ஆவார். தமிழக மக்களை இவர்கள் எந்தளவுக்கு பிற்போக்கான மனநிலைக்கு இழுத்துச் செல்கிறார்கள் என்று பாருங்கள். நாம் ஜனநாயக நாட்டில்தானே வாழ்கிறோம்? தாத்தா...மகன்...பேரன்...பூட்டன் என இவர்கள் சந்ததி சந்தியாக இவர்கள் குடும்பமே ஆண்டு அனுபவிக்க இது என்ன மன்னராட்சியா? இதை விட பெரிய காமெடியை சொல்கிறேன். அந்தக் கட்சியின் தலைவருக்கு சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இல்ல...எனக்கு புரியல...தமிழ்நாட்டு மக்களை அவ்வளவு பெரிய வடிகட்டிய முட்டாளாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இவர்களுக்கு என்னுடைய வாக்குகளை ஏன் செலுத்தமாட்டேன் என்பதற்கு இன்னும் ஒரு புத்தகமே போடலாம் அவ்வளவு காரணங்கள் இருக்கிறது.
கதர் சட்டைகளை உள்ளடக்கிய ஒரு கட்சி இருக்கிறது. இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்ததே அந்த கட்சிதான். ஆனால், இன்றைக்கு ஏன் இருக்கிறது எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை. கூட்டணி இல்லை என்றால் அந்த கட்சிக்கென்று இருக்கிற பென்ஷன் வாங்கும் 4 தொண்டர்களும் கூட இந்நேரம் கம்பி நீட்டியிருப்பார்கள். கொள்கைப் பிடிப்பற்ற பண்ணையார் மனப்பான்மையில் வாழும் இக்கட்சிக்கும் வாக்குகளை செலுத்த மனமில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும் அடுத்தடுத்த நாட்களில் சுதந்திரமடைந்த நாடுகள். இன்றைக்கு இந்தியா எந்த நிலைமையில் இருக்கிறது. பாகிஸ்தான் எந்த நிலைமையில் இருக்கிறது என்று பாருங்கள். கல்வியறிவு, சமூக பொருளாதார வளர்ச்சி எதிலும் இந்தியாவை பாகிஸ்தானோடு ஒப்பிடவே முடியாது. பாகிஸ்தான் பாதாளத்தில் கிடக்கிறது. காரணம், அது ஏற்றுக்கொண்ட கொள்கை. பாகிஸ்தான் ஒரு மதத்தை அடிப்படையாக கொண்ட நாடு. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இந்த வித்தியாசம்தான் இந்தியாவை எப்போதும் முன்னோக்கியே நகரச் செய்கிறது. ஆனால், ஒரு கட்சிக்கு இந்த வித்தியாசம் பிடிக்கவில்லை. இந்த கலாச்சாரம் பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் ஒன்றாக குலைத்து ஒரே மதமாக ஒரே இனமாக, ஒரே வார்த்தையில் நம்முடைய நாட்டையும் பாகிஸ்தான் போன்ற ஒரு மத அடிப்படைவாத நாடாக மாற்ற முற்படுகிறது. தேசத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட சக மனிதனின் நம்பிக்கைக் கொண்ட எந்த ஒரு குடிமகனும் அந்த கட்சிக்கு வாக்களிக்க மாட்டான். அவர்கள் பார்வையில் ஆண்டி இந்தியனாக இருப்பதே எமக்கு பெருமை.
சரி, இருக்கிற கட்சிகளெல்லாம் வேண்டாம். புதிதாக வந்த ஒருவருக்கு வாக்களிப்போம் என யோசித்தால், புதியவர்களும் பல நேரங்களில் காலை இடறவே செய்கின்றனர். சினிமாவில் ஓய்வுபெற்ற பிறகு, அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ஒரு நபர், ஒரு ஜாதி கட்சிக்கு 40 சீட்டுகளை ஒதுக்கியிருக்கிறார். டிக்டாக்கில் 'முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை' என பீலா விட்ட பிரபலத்திற்கெல்லாம் சீட் கொடுத்திருக்கிறார். இப்படியான அரைவேக்காட்டுத்தனங்களே அவரை வெறுக்க செய்கிறது.
மைக் இன்றியே 10 மைல் தொலைவு தள்ளியிருப்பவனுக்கும் கேட்கும் அளவுக்கு வீர உரை ஆற்றும் நபர், சமீபத்தில் ஒரு ஊழல் குற்றவாளியை சந்தித்து பேசி அவர் சார்ந்த கட்சிக்கு சமரசம் பேசும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். இதெல்லாம் தேவையா தம்பிகளே?? இப்படி ஒரு நபர் மாற்று சக்தியாக இருப்பாரென எப்படி நம்பி வாக்களிக்க முடியும்?
யாருக்குமே வேண்டாம்....அதான் நோட்டா இருக்கே! ஆனா, நம் நாட்டில் நோட்டாவுக்கு ஓட்டை போடுவதும் குப்பைத் தொட்டியில் போடுவதும் ஒன்றுதான். அதனால் எதற்கும் ப்ரயோஜனமே இல்லை. யாருக்கும் ப்ரயோஜனமில்லை. அப்ப என்னதான்யா செய்றது?
முதல்வன் பட புகழேந்தி மாதிரி....சர்கார் பட சுந்தர் மாதிரி ஒரு கேரக்டர் திடீரென நிஜத்தில் வந்துவிட்டால் அவர்களுக்கு வாக்களித்துவிடலாமா!?
கட்டாயம் அவர்களுக்கு வாக்களிக்கலாம். ஆனால், அதனால் என்ன மாறப்போகிறது? ஒன்றுமே மாறாது. ஏன் தெரியுமா!????
...........
.....
தொடரும்😌
Comments
Post a Comment