தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! #CoviShield

தடுப்பூசி காலத்தின் கட்டாயம்! கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடையே தேவையில்லாத ஒரு பயம் இருப்பதை பார்க்க முடிகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் உடனே உடனே சுருண்டு விழுந்து இறந்து போவதாகவும்...இரத்தம் உறைந்து போவதாகவும்...கை கால்கள் இழுத்துக் கொள்வதற்காகவும் ஏகப்பட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பேசப்படுவதை காதுபட கேட்க முடிகிறது. இன்னும் சிலர், தடுப்பூசிகள் இலுமினாட்டிகளின் சதி என்கிற ரேஞ்சுக்கு கட்டுக்கதைகளை அள்ளிவிடுகின்றனர். மக்கள் கொரோனாவை பார்த்து பயப்படுவதை விட, தடுப்பூசியை பார்த்துதான் அதிகம் பயப்படுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது. எனக்கு இதில் முதலிலிருந்தே ஒரு தெளிவான பார்வை இருந்தது. இப்படி ஒரு கொடூரமான நோய்க்கு நம் கையில் எந்த மருந்தும் இல்லாதபோது, நமது அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது நம் கடமை. மேலும், தடுப்பூசிகள் குறித்த வதந்திகளையும் நம்பக்கூடாது. குறிப்பாக, இணையத்தில் தடுப்பூசி குறித்து பரப்பப்படும் எந்த நெகட்டிவ்வான செய்தியையும் நம்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடி டெல்லியின் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாள் முதலே, வீட்டில் என் பெற்றோரிடம் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு நச்சரிக்க தொடங்கிவிட்டேன். அவர்களுக்கும் தடுப்பூசிகள் குறித்து சிறிய அளவில் பயம் இருக்கவே செய்தது. ஆனால, என்னுடைய நச்சரிப்பு தாங்காமல் இன்று என்னுடைய அம்மா மட்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டார். இன்றைக்கே எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு அம்மாவை அழைத்து சென்றேன். தடுப்பூசி போடும் பணியில் இருக்கும் செவிலியர்களும் உதவியாளர்களும், ரொம்பவே மரியாதையோடு பக்குவமாக எல்லா விவரங்களையும் கேட்டு தெரிந்துக் கொண்டு தடுப்பூசியை போட்டனர். முதலில் நம்முடைய விவரங்களை கேட்டு பதிவு செய்துக்கொள்கிறார்கள். இதற்கு ஆதார், வோட்டர் ஐடி போன்ற எதாவது அடையாள அட்டையை கட்டாயம் கேட்கிறார்கள். என்னுடைய அம்மா வேறு சில பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறார். அதனால், அம்மா கடைசியாக மருவத்துவரிடம் ஆலோசனைக்கு சென்ற போது உள்ள மருந்துச்சீட்டையும் வாங்கி ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்கள். அதன்பிறகு, நேராக தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டு கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தினார்கள். ஊசி போட்ட பிறகு, ஒரு 10 நிமிடம் அமர வைத்து தெளிவாக ஊசி குறித்து விளக்கினார்கள். ஊசி போட்டிருப்பதால் ஒரு சிலருக்கு தலைவலி, காய்ச்சல் உண்டாகலாம். அது குறித்து பயப்பட தேவையில்லை. இரண்டே நாளில் தானாக சரியாகிவிடும் என பக்குவமாக எல்லாருக்கும் புரியும்படி சொல்லி வழியனுப்பினர். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு ஆதாரமாக மொபைலுக்கும் ஒரு மெசேஜை அனுப்பிவிடுகிறார்கள். இந்த மெசேஜை காண்பித்து ஒரு மாதம் கழித்து அடுத்த டோஸ் ஊசியை போட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது. என்னுடைய அம்மா எப்போதும் போலவே இயல்பாக இருக்கிறார். ஒரு பிரச்சனையுமில்லை. இரத்த வாந்தி வரவில்லை. கை கால் இழுக்கவில்லை. சுருண்டு விழவில்லை. எங்கள் குடும்பத்திலுமே பலருக்கும் கொரோனா ஊசி குறித்த பயம் இருக்கவே செய்தது. ஆனால், என் அம்மா ஊசி போட்டு வந்த தகவலை எல்லாரிடமும் பகிர்ந்துக்கொண்டார். அவர்களுக்கு இருந்த பயம் இப்போது தெளிவாகி, ஊசி போடுவதற்கு ஆர்வமாக சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா என எல்லாரும் தயாராகிவிட்டார்கள். அடுத்தடுத்த நாட்களில் அவர்களும் ஊசி போட்டுக்கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேல் இன்னொரு விஷயம், அரசு மருத்துவமனையில் இந்த ஊசிக்காக ஒரு பைசா கூட வசூலிக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 250 ரூபாய் வசூலிக்கிறார்கள். கொரோனாவே வந்தாலும் பரவாயில்லை, தடுப்பூசி மட்டும் போட்டுக் கொள்ளமாட்டேன் என அடம்பிடிப்பவர்கள் தேவையற்ற பயத்தை விடுத்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள். இப்போது வேகமாக மீண்டும் கொரோனா பரவி வருவதால் அஜாக்கிரதையாக இருப்பது ஆபத்திலேயே முடியும். அதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஊசி போட்டுக்கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz