Happy Birthday AamirKhan

ஆ..!மீர் கான்💝 சேவியர்ஸில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய வகுப்பாசிரியராக செல்வக்குமார் சார் இருந்தார். மாணவர்கள் புத்தகங்களை மட்டும் படித்தால் எதையும் சாதிக்க முடியாது. அனைத்து விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். அதனால், பல நேரங்களில் வெகு இயல்பாக மாணவர்களோடு நெருங்கி உரையாடிக் கொண்டிருப்பார். அப்போது, ஒரு நாள் தாரே ஷமீன் பார் என்று ஒரு படம் வெளியாகியிருப்பதாகவும் அதை அனைவரும் பார்க்க வேண்டும் என்று கூறி அந்த படம் குறித்து பல விஷயங்களை சிலாகித்து கூறிவிட்டு அவர் செல்லும் போது வழிமறித்து படத்துல யார் சார் ஹீரோ?? என நான் கேட்டேன். அப்போது அவர் சிரித்துக் கொண்டே 'அமீர்கான்' என பதிலளித்தார். அப்போதுதான் 'அமீர்கான்' என்ற நடிகரை முதன் முதலாக நான் அறிந்தேன். ஆனாலும்,இப்போது லாக்டவுணில்தான் அமீர்காமின் பல படங்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 2000 களுக்கு பிறகு மாறிவரும் சினிமா ரசிகர்களின் ரசனையை புரிந்துக்கொண்டு திரையில் பிரதிபலித்த முதல் வெகுஜன இந்திய நடிகர் ஆமிர்கான் தான். லகான் ரங் தே பஸந்தி தாரே ஷமின் பார் கஜினி 3 இடியட்ஸ் PK டங்கல் என அத்தனை படங்களும் ஒவ்வொரு விதத்தில் ரொம்பவே ஸ்பெசலானவை. லகானில் கிரிக்கெட்டை மையப்படுத்தி அடிமைத்தனத்தையும் ஜாதிய பிரிவினைகளயும் கேள்விக் கேட்டிருப்பார். ரங் தே பஸந்தியில் ஒரு மார்டன் டே இந்திய இளைஞனுக்கு அரசியல் மீது இருக்கும் கண்மூடித்தனமான வெறுப்புகளை அப்படியே வெளிக்காட்டியிருப்பார். கடைசியில் அந்த வெறுப்பு எவ்வளவு பெரிய மூடத்தனம் என்பதையும் அந்த கேரக்டர் மூலம் உணர வைத்திருப்பார். படத்தில் எந்த இடத்திலும் அவர் ஒரு பெரிய ஹீரோ என்பதால் அவருடைய கேரக்டர் தேவையின்றி முன்னிலைப் படுத்தப்பட்டிருக்காது. கதையின் முக்கியமான அம்சமாக மாதவன் இருப்பார். க்ளைமேக்ஸில் அமீர்கானைவிட சித்தார்த்க்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். இப்படி சக கேரக்டர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதே அமீர்கான் படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமும் கூட. டங்கலிலும் அப்படியே செய்திருப்பார். 3 இடியட்ஸ் சொல்லவே வேண்டாம். இப்படியொரு கதையை இந்திய நடிகர் ஒருவர் புரிந்துக்கொண்டு நடிப்பதே மிகப்பெரிய சாதனை. 2014 இல் வெளியான PK எல்லாவற்றுக்கும் உச்சம். அந்த படம் மட்டும் இப்போது எடுக்கப்பட்டிருந்தால் வெளியாகியிருக்குமா என்பதே சந்தேகம்தான். 'இந்த யுனிவர்சுல ஒரு புள்ளியா இருக்குற பூமியில எதோ ஒரு மூலைல உட்காந்திருக்குற நீங்கதான் இது எல்லாத்தயும் படைச்ச கடவுள காப்பாத்த போறீங்களா!?' என படத்தில் அமீர் பேசும் வசனம் இன்றைய இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலையும் விளக்கிவிட போதுமானது. தெளிவான சமூக அரசியல் புரிதல் உடைய வெகுசில இந்திய நடிகர்களில் அமீர் கான் முதன்மையானவர். அவர் வெறும் நடிகராக இருந்திருந்தால் நான் இப்படி கூறியிருக்கமாட்டேன். லகானுக்கு பிறகு அமீரின் பெரும்பாலான படங்களுக்கு அவரேதான் தயாரிப்பாளர். டிஸ்லக்சியாவால் பாதிக்கப்பட்ட சிறுவனை மையப்படுத்திய தாரே ஷமீன் பார் அவரே இயக்கி நடித்த படம். 2004 இல் குஜராத் கலவரங்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசியிருக்கிறார். நர்மதா ஆற்றில் அணை கட்டுவதற்கு எதிராக மேதா பத்கர் முன்னெடுத்த போராட்டங்களில் வீரியமாக பங்கேற்றார். மற்ற நடிகர்கள் மீது விழுவது போன்று, 'விளம்பரத்திற்காக பேசுகிறார். சில விஷயங்களில் மட்டுமே வாய் திறப்பார். பல நேரங்களில் அமைதியாக இருப்பார்' போன்ற விமர்சனங்களும் அமீர்கான் மீது உண்டு. ஆனால், அவர் அப்படி சில சமயங்களில் மட்டுமே பேசும்போதும் கூட யார் பக்கம் நிற்கிறார் என்பதை பார்க்க வேண்டும். எப்போதுமே அவர் மக்களுக்கு ஆதரவான நிலையையே எடுத்திருக்கிறார். 'சத்யமேவ ஜெயதே' என அமீர் நடத்திய டிவி ஷோ போது அவரின் சமூக அரசியல் புரிந்துணர்வுகளை உணர்ந்துக்கொள்ள. ஆ...மீர் கான் எப்போதுமே ஒரு ஆச்சர்யம்தான்! Happy Birthday AamirKhan!😊

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz