'அந்த ஒரு நாள்..' My Vikatan Story

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்! 757, அண்ணா சாலை என்கிற இந்த முகவரி என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரியின் இரண்டாமாண்டின் இறுதியில் எதிர்காலம் குறித்த ஒருவித பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. துறைரீதியான அறிவும் இல்லாமல் பொது அறிவும் இல்லாமல் எப்படி காலேஜை முடித்துவிட்டு பிழைக்கப்போகிறோம் என்கிற பயம் வெகுவாக எனக்குள் உண்டானது. அப்போதுதான் ஒரு பேராசிரியர் அட்லீஸ்ட் ஒரு குமுதம், குங்குமம், விகடன் போன்ற பத்திரிகைகளை ஆவது வாசிக்கிற பழக்கத்தை உண்டு பண்ணிக்கொள்ளுங்கள் அது பெரியளவில் கைக்கொடுக்கும் என அறிவுரை கூறியிருந்தார். அதை மனதில் வைத்துக்கொண்டு 2018 பிப்ரவரியின் இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். காசு கொடுத்து நான் வாங்கிய முதல் ஆனந்த விகடன் இதழ் அதுதான். பக்கங்களை புரட்ட புரட்ட திடீரென ஒரு பக்கத்தில் மாணவப் பத்திரிகையாளருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. (பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டோ என்னவோ!) அதற்கு விண்ணப்பித்துவிடுவோம் என எதோ ஒரு உந்துதல். அதன்படி விண்ணப்பித்தும் விட்டேன். முதல் ரவுண்ட்டில் நாம் ஒரு கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி தலைமையிலான அரசு எப்படி செயல்படுகிறது? என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். அரசியல்வாதிகள் மீது இளம் இரத்தங்களுக்கு இருக்கும் அதே வெறுப்பு எனக்கும் இருந்ததால் அதை எப்படியோ எழுதிவிட்டேன். திடீரென ஒரு நாள் ஒரு மெயில் வந்தது. நீங்கள் அடுத்தக்கட்டத்திற்கு தேர்வாகிவிட்டீர்கள். எழுத்துத்தேர்வு மதுரையில் வைத்து நடக்கும் என்று. அந்த எழுத்துத்தேர்வையும் எழுதிவிட்டு வந்தேன். பிப்ரவரியில் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்ததிலிருந்தே நடப்பு நிகழ்வுகளில் கொஞ்சம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டேன் என்பதால் ஏப்ரலில் நடந்த இந்த தேர்வையும் சமாளித்துவிட்டேன். அதேமாதிரி திடீரென ஒருநாளில் வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. நீங்கள் இறுதிக்கட்டத்திற்கு தேர்வாகிவிட்டீர்கள். சென்னையில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ளுங்கள் என்பதே செய்தி. முதன்முதலாக நான் சென்னைக்கு வருகிறேன். அதற்கு காரணமாக அமைந்தது விகடன் தான். ஒருவித மிரட்சியுடனே 757, அண்ணா சாலையில் இருக்கக்கூடிய விகடன் அலுவலகத்தை அடைந்தேன். இதுவரை அனுபவித்திடாத ஒரு புதுவித சிலிர்ப்பை அந்த அலுவலகம் கொடுத்தது. அந்த அலுவலகத்தின் மேல் மாடியில் இருக்கிற கேண்டீனில் நேர்முகத் தேர்விற்காக வந்திருந்த மாணவர்களை அமர வைத்திருந்தார்கள். அங்கேதான் Mari Vijay Kural Prabhakaran போன்ற நண்பர்களை சந்தித்தேன். (அவர்களுக்கு என்னை நினைவிருக்கிறதா என தெரியவில்லை. ஆனால், எனக்கு அவர்களை இன்னமும் நினைவிருக்கிறது. காரணம்,பிற்பகுதியில்..) இதன்பிறகு நடந்தவைதான் மொத்தமாக என்னை மாற்றியது. முதலில் விகடனின் மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் எனக்கு நேர்முகத் தேர்வு இருந்தது. தி.முருகன் அவர்கள்தான் என்னை நேர்முகத் தேர்வு செய்தார் என நினைக்கிறேன். சரியான பெயர் நியாபகம் இல்லை. எந்த நடிகர் பிடிக்கும்?? எந்த விளையாட்டு பிடிக்கும்?? என ரொம்பவே இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தார். சமீபத்தில் என்ன படம் பார்த்தீர்கள்? என ஒரு கேள்வி கேட்டார். அதற்கு, நான் 'காலா' என்று கூறினேன். படம் எப்படியிருந்தது? பிடித்ததா? என கேள்விக் கேட்டார். கபாலிக்கு இது கொஞ்சம் பரவால்ல சார்! என பதிலளித்தேன்😂 (கபாலி, காலா படங்கள் பேசிய அரசியலை மனதில் வைத்து அதுபற்றி என்னுடைய கருத்து என்ன என்பதை அறிய அவர் அப்படி கேட்டிருக்கிறார். இதுவே எனக்கு கொஞ்ச நாட்கள் கழித்துதான் புரிந்தது.) அப்படியே இந்த நேர்காணல் முடிய, அடுத்து ஒரு க்ரூப் டிஸ்கசன் நடைபெற்றது.இந்த க்ரூப் டிஸ்கசன் தான் என்னை எனக்கே அடையாளப்படுத்திக் கொடுத்தது. விகடனின் அப்போதைய ஆசிரியர் ரா.கண்ணன் முன்னிலையில் விகடனில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் பெரிய பெரிய பத்திரிகையாளர்கள் எல்லாம் சுற்றி அமர்ந்திருந்த அறையில் நாங்களும் ஒரு 15 பேர் அமர்ந்திருந்தோம். காலேஜில் வகுப்பறையில் எல்லார் முன்னும் நின்று ஒரு இரண்டு நிமிடம் பேசுவதற்கே எனக்கு குப்பென்று வியர்த்துவிடும். இங்கே தமிழகத்தின் மிக முக்கிய பத்திரிகையாளர்கள் எல்லாம் சுற்றியிருக்க சொல்லவா வேண்டும். ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்களின் திறமைகள் குறித்து பேசிக்கொண்டே வந்தார்கள். எல்லாரும் நீண்டகால விகடன் வாசகர்களாக இருந்தது எனக்கு வியப்பை அளித்தது. (பிப்ரவரியில்தான் நான் முதன்முதலில் விகடன் இதழை வாசிக்கத் தொடங்கினேன். ஜூனில் இந்த நேர்முகத்தேர்வு!) Mari Vijay ஆண்பால் பெண்பால் அன்பால் என விகடனில் வெளியான தொடர் குறித்தெல்லாம் பேசி அட்டகாசப்படுத்திவிட்டார். பிரபாகரனும் நன்றாக பேசியிருந்தார். அந்த அறையில் இருந்தவர்களிலேயே மிக மொக்கையாக பேசியது நான் ஒருவன் தான். அதிகபட்சம் ஒரு நிமிடம் பேசியிருந்தேன். என்னைப் பற்றிய சுயவிவரத்தை மட்டுமே கூறினேன் வேறு எதுவும் பேசுவதற்கு என்னிடம் இல்லை. இதுதான் என் மேல் எனக்கே கோபத்தை தூண்டியது. என் வயது ஒத்தவர்கள் சமூகம் குறித்து எவ்வளவு விசாலமான பார்வையுடையவர்களாக இருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி அரைகுறையாக இருக்கிறேன் என்கிற கோபத்தையும் இனிமேலும் விழித்துக் கொள்ளாவிட்டால் இந்த உலகத்தில் பிழைப்பை ஓட்ட முடியாது என்கிற சுதாரிப்பையும் உண்டு பண்ணியது. அந்த அறையிலிருந்த அத்தனை பேரும்தான் இதற்கு காரணம். அந்தக் க்ரூப் டிஸ்கஷன் நடந்த ஒரு மணி நேரமும் அந்த அறையில் சக மாணவர்களாக இருந்த அத்தனை பேரையும் வியப்போடு மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். இன்னமும் அத்தனை பேரின் முகமும் எனக்கு நியாபகமிருக்கிறது ஆனால் மாரி மற்றும் பிரபாகரனின் பெயர் மட்டும் கூடுதலாக நினைவில் இருக்கிறது. காரணம், மாரி எங்க திருநெல்வேலிக்காரர். பிரபாகரன் மூன்றாவது சுற்றில் என்னுடன் பயணித்தவர். நேர்முகத் தேர்வு, க்ரூப் டிஸ்கசன் இரண்டும் முடிந்தவுடன் மதியத்திற்கு மேல் ஒரு வேனில் எல்லாரையும் ஏற்றிக் கொண்டு சென்னையின் முக்கியமான இடங்களில் இறக்கிவிட்டு விடுவார்கள். அங்கே அந்த இடத்தில் சுற்றி நம் இஷ்டத்திற்கு ஒரு ரிப்போர்ட் எழுதி வர வேண்டும். இங்கேதான் பிரபாகரனையும் என்னையும் தி.நகரில் இறக்கிவிட்டார்கள். அருகே இருந்த ஒரு சரவணபவா ஹோட்டலில் நானும் பிரபாகரனும் மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு உலாவ கிளம்பினோம். அங்காடித்தெரு படத்தில் பார்த்த ரங்கநாதன் தெருவில் நான் உலாவி விட்டு வர பிரபாகரன் அதற்கு முன்பாக இருக்கிற பூங்காவில் உலாவிவிட்டு வந்தார். அதை ஒரு ரிப்போர்ட்டாக எழுதி கொடுத்துவிட்டு, பயணப்படியை வாங்கிக்கொண்டு ஊருக்கு கிளம்பிவிட்டோம். கிளம்பும்போதே நான் எப்படியும் தேர்வாக மாட்டேன் என்று எனக்கு தோன்றியது. அதேபோல தேர்வும் ஆகவில்லை. ஆனால், அந்த விகடன் அலுவலகமும் அந்த ஒரு நாளும் அந்த ஒரு மணி நேர க்ரூப் டிஸ்கஷனும் என்னை நிறையவே மாற்றிவிட்டது. க்ரூப் 4 எழுதி ஒரு அரசு அலுவலகத்தில் பெஞ்ச்சை தேய்த்தால் போதும் என்கிற என்னுடைய குறுகலான கனவு அன்றே காணாமல் போய்விட்டது. சமூகத்தின் மீது என்னுடைய பார்வை மேலும் விசாலமாகியது. காலா படத்தை சுமார் என்று சொன்னவனுக்கு இப்போது பரியேறும் பெருமாளும் திரௌபதியும் பேசும் அரசியலை பிரித்துணர முடிகிறது. தொடர்ந்து செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் வெறிகொண்டு வாசிக்கத் தொடங்கினேன். கொஞ்ச நாளிலேயே புதியதலைமுறை இதழில் மாணவப் பத்திரிகையாளர்களுக்கான அறிவிப்பு வந்தது. அதற்கு அப்ளை செய்து இறுதிவரை வந்து கோட்டை விடவில்லை. தேர்வாகிவிட்டேன். தொடர்ந்து பல கட்டுரைகளை புதிய தலைமுறை இதழுக்காக எழுதினேன். அதன்பிறகு, என்னுடைய சில கிரிக்கெட் கட்டுரைகளை பார்த்துவிட்டு விகடனிலிருந்தே என்னை அழைத்தார்கள். இப்போது விகடனிலும் தொடர்ந்து கிரிக்கெட், சினிமா குறித்த கட்டுரைகளை எழுதி வருகிறேன். GullySporys என்கிற பக்கத்திலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ஆண்டுக்கான மாணவப் பத்திரிகையாளர்களுக்கான அறிவிப்பை விகடன் வெளியிட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு முறை இதற்கு முயன்று பாருங்கள். நீங்க ஜெயிக்கறதும் தோக்கறதும் ஒரு மேட்டரே இல்ல...ஒருநாள் மட்டும் 757, அண்ணாசாலை என்கிற முகவரிக்கு சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். அதுக்கு நான் கியாரண்டி! #விகடன் #Vikatan - உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

ஆதிக்கம் செலுத்தும் நியுசிலாந்து.... தடுமாறும் இந்தியா... மூன்றாம் நாள் ஆட்டம் எப்படியிருந்தது?! #WTCFinals #Day3

கோலி எனும் சபிக்கப்பட்ட மாவீரன்! #Kohli #WTCFinals #IndVsNz