எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்!

எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் கபடத்தனம்! கடந்த சில நாட்களுக்கு முன்பு Vikatan EMagazine பக்கத்தில் ஒரு கார்ட் போஸ்ட் செய்திருந்தார்கள். அதில், சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் கேட்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேட்கப்பட்டிருந்தது. அந்த போஸ்ட்டின் கீழே கமெண்ட் பாக்ஸில், நூற்றுக்கணக்கான பேர் தங்களுடைய ஆதக்கங்களை கொட்டித் தீர்த்திருந்தார்கள். பெரும்பாலான கமெண்ட்டுகள் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களை பகற்கொள்ளையர்கள் என சித்தரிக்க முயல்வதாகவே இருந்தது. இந்த எண்ணம் பெரும்பாலான மக்களிடம் இருப்பதாக உணர்கிறேன். 'இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்கிப்பானுக..நம்மக்கிட்ட டிப்ஸுங்ற பேர்லயும் கொள்ளையடிப்பானுக' என பேசப்படுவதை காதுபட பல இடங்களில் கேட்டிருக்கிறேன். என்னுடைய அப்பா 25 வருடத்திற்கும் மேலாக சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதனால் உண்மை என்ன என்பது எனக்கு கொஞ்சம் தெரியும். அதை விளக்குவதற்காகவே இந்த பதிவு. முதலில் மக்களுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், இவனுக கம்பெனிலயும் சம்பளம் வாங்குறானுக என்பதே. ஆனால், உண்மை என்ன தெரியுமா?? 25 வருடமாக வீடுவீடாக சிலிண்டர் டெலிவரி செய்யும் என்னுடைய அப்பாவுக்கு டிசம்பர் 31, 2020 வரை எந்தவித மாதச்சம்பளமும் கொடுக்கப்பட்டதில்லை. மாதம் ரூ 1000-2000 என படிக்காசு மாதிரி சொற்பமாக ஒரு தொகையை மட்டுமே கொடுப்பார்கள். பெரும்பாலான கம்பெனிகளில் இப்படித்தான். அதனாலேயே இந்த தொழிலாளர்கள் சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடுகளில் ஒரு சிலிண்டருக்கு 20-30 (சில இடங்களில் 50 கூட) ரூபாய் வாங்குகிறார்கள். மக்களின் பார்வையில் இது தவறுதான். ஆனால், என்ன செய்ய முடியும்? மக்கள் யாராவது டிப்ஸ் கேட்கிறார்கள் என புகார் அளித்தால் டெலிவரி செய்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக ஏஜென்ஸியினர் கூறுவார்கள். ஆனால், எதுவும் நடக்காது. காரணம், அப்படி டெலிவரி செய்பவர் மீது நடவடிக்கை எடுத்து டிப்ஸ் பெறுவதை தடுத்தால், ஏஜென்ஸிகள் தங்களின் கல்லாப் பெட்டியில் இருந்தல்லவா தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டி வரும்? மக்களின் புகார் அதிகரித்ததால் மத்திய அரசாங்கமே இப்போது இந்த டிப்ஸ் விஷயத்தில் கறார் காட்ட தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு ஏஜென்ஸியுமே அவர்களில் தொழிலாளர்களுக்கு மாதச்சம்பளத்தை வங்கிக்கணக்கில் செலுத்தியே ஆக வேண்டும் என அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறது. ஆனாலும் பல ஏஜென்ஸிகள் தகிடுதத்தங்களையே செய்கிறது. என்னுடைய அப்பாவுக்கும் கடந்த ஜனவரியிலிருந்து 7000 ரூபாயை மாதச்சம்பளமாக கையில் கொடுக்கிறது.(வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை) 25 வருடமாக வேலை பார்த்த நபருக்கு மாதச்சம்பளம் 7000 !. இது என்ன நியாயம்? சரி, இதெல்லாம் கம்பெனிக்கும் ஊழியர்களுக்கும் இடையேயான பிரச்சனை, நாங்கள் ஏன் தண்டம் அழ வேண்டும்? என மக்கள் நினைக்கலாம். சரிதான். ஆனால், நீங்கள் ஒவ்வொரு முறை சிலிண்டர் வாங்கும் போதும் டெலிவரி செய்பவரிடம் சண்டை போடுவீர்கள். ஆனால், அப்படி சண்டை செய்வதால் ஒரு மாற்றமும் உண்டாகாது. இது எளியவனை எளியவனுக்கு எதிராகவே கொம்பு சீவிவிடும் செயல் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நியாயமான ஊதியத்தை கம்பெனிகள் வழங்கினால் இவர்கள் ஏன் டிப்ஸ் கேட்கப்போகிறார்கள்? சொமாட்டோ, ஸ்விக்கி ஊழியர்கள் தாக்கப்பட்டாலோ, ஊதியக்குறைப்பு என வீதியில் இறங்கினாலோ அவர்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் கவனமும் ஆதரவும் கூட சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு கிடைப்பதில்லை. கொரோனா காலத்தில் ஒருநாள் கூட என்னுடைய அப்பா விடுமுறை எடுக்கவில்லை. கொரோனா காலத்தில் எல்லாரும் வீட்டில் இருந்ததால் சிலிண்டர் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருந்திருக்கிறது. வழக்கமான நாட்களை விட அதிக வீடுகளுக்கு சப்ளை செய்ய வேண்டியிருந்திருக்கிறது.அத்தனை நாளும் வேலைக்காக ஓடியிருக்கிறார். பெரிய பெரிய விஐபிக்களின் கொரோனா மரணச் செய்திகளை கேட்டு வீட்டில் நாங்கள் குலைநடுங்கிப் போய் கிடப்போம். ஒரு வாரமாவது விடுமுறை எடுங்கள் என ஒவ்வொரு இரவும் என் அப்பாவிடம் சண்டையிட்டிருக்கிறேன். அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தினருக்கு இருந்த அச்ச உணர்வு முன்களப்பணியாளராக இருப்பவரின் குடும்பங்கள் மட்டுமே உணர முடிந்த வலி. இப்படி ஒரு அவசர சூழ்நிலையில் வேலை பார்த்தவர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் இல்லை. கொரோனா தடுப்பூசி போடப்படுவதில் கூட இந்த ஊழியர்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். இத்தனைக்கு பிறகும் மக்கள் மனதில் பகற்கொள்ளையர்களாகவே சிலிண்டர் டெலிவரி செய்திருப்பவர்கள் பதிந்திருக்கிறார்கள். ஒன்றே ஒன்றை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள் மக்களே...சிலிண்டர் டெலிவரி செய்பவர்களும் உங்களைப் போன்றவர்கள்தான். உங்களைப் போன்றேதான் இவர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. ஒரு சுரண்டப்பட்டவனின் கைகள் இன்னொரு சுரண்டப்படுபவனை நோக்கியே நீள்வது எவ்வளவு பெரிய கொடூரம்?? யாரை நோக்கிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். இல்லையெனில் உங்களுடைய கேள்விகளுக்கு எந்த காலத்திலும் பதில் வரவே வராது. #Gas #Cylinder #Price

Comments

Popular posts from this blog

அன்பே சச்சின் !!!! #Sachin #HBDSachin #Cricket #MasterBlaster

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review