அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! #Tokyo #Olympics #Refugees

அகதிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒலிம்பிக்ஸ்! #Refugees #Olympic #Tokyo அகதிகளுக்கான அங்கீகாரம், முன்னுதாரணமாக மாறிய ஒலிம்பிக்! சொந்தபந்தம், நண்பர்கள், சொத்து சுகம் எதுவுமே இல்லையென்றாலும் உங்களுக்கென்று ஒரு நாடு இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒரு நாட்டின் குடிமகனாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவரே. உங்களுக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. உங்களுக்கான குறைந்தபட்ச வாழ்வுரிமையை அந்த அடையாளமே உறுதி செய்துவிடும். ஆனால், எந்த நாட்டின் குடிமகனாகவும் இல்லாதவர்களை நினைத்து பாருங்கள். 'அகதிகள்' என்பதே அவர்களுக்கான ஒற்றை அடையாளம். ஆனால், இந்த அடையாளம் எங்கேயும் செல்லுப்படியாகாது. ஒரு சில ரொட்டி துண்டுகளை கூட இந்த அடையாளத்தால் பெற்றுக்கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட அவலநிலையில் 'அகதிகள்' என்ற அடையாளத்தோடு உலகம் முழுவதும் 8 கோடி பேர் வாழ்கின்றனர். அதிகார வெறியினால் உண்டாகும் அநாவசிய போர்கள், அந்த போர்கள் அருளும் அசாதாரண சூழல், உயிர்ச்சேதம், வறுமை இவற்றிலிருந்து தப்பிப்பிழைக்க தினமும் 37000 பேர் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். அகதிகளின் வலி தமிழர்களுக்கு அந்நியமானதில்லை. ஒரு சில நாடுகளை தவிர இவர்களை வேறு யாரும் ஏற்றுக்கொள்வதே இல்லை. விரட்டியடிப்பார்கள், கோடிகளை கொட்டி எல்லைகளில் கோட்டைச்சுவரை எழுப்பி நிர்கதியாக்குவார்கள். இதுதான் அகதிகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச வரவேற்பு. ஆனால், இதையெல்லாம் உடைத்தெறியும் விதமாஜ அகதிகளையும் அங்கீகரித்து அவர்களையும் உலக அரங்கில் நிமிர்ந்த நடைபோட வைத்துள்ளது ஒலிம்பிக். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எப்போதும் க்ரீஸ் நாடே முதலில் கொடியேந்தி அணிவகுத்து செல்லும். அதனை தொடர்ந்தே மற்ற நாடுகள் அணிவகுக்கும். இந்த முறை க்ரீஸுக்கு அடுத்து ஒலிம்பிக் சின்னம் பொறித்த கொடியோடு வீரர் வீராங்கனைகள் அடங்கிய ஒரு குழு வந்தது. அதுதான் அகதிகளுக்கான குழு. தங்களை உள்ளேயே சேர்த்துக் கொள்ளாத பல நாடுகளும் வரிசையில் காத்திருக்க, உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த அந்த அரங்கில் கம்பீரமாக அணிவகுத்து சென்றது அகதிகள் அணி. கண்ணியமற்ற முறையில் நடத்தப்படும் அகதிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும் என சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பில் 2015 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஒலிம்பிக் அமைப்பின் தலைவராக இருக்கும் தாமஸ் பேச், ஒலிம்பிக் அமைப்பு சார்பில் அகதிகளின் வாழ்வுரிமைக்கு பொருளாதார உதவி செய்வதாக அறிவித்தத்தோடு மட்டுமல்லாமல் ஒலிம்பிக்கிலும் அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும் என அறிவித்தார். 'அகதிகளும் மனிதர்கள்தான் என்பதையும் அவர்களிடம் மனிதநேயத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முன்னெடுப்பு' என விளக்கமளித்தார் தாமஸ் பேச். இதனை தொடர்ந்தே, ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அகதிகளுக்கான ஒரு அணி உருவாக்கப்பட்டு ரியோ ஒலிம்பிக்கிலும் கலந்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் அகதியாக குடியேறியிருக்கும் 10வீரர்/வீராங்கனைகள் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தனர். இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த எண்ணிக்கை 29 ஆக உயர்ந்திருக்கிறது. சிரியா, காங்கோ, சூடான், எரித்ரியா, வெனிசுலா, ஈரான், ஆஃப்கானிஸ்தான், கேமரூன் என பல நாடுகளை சேர்ந்த, அகதிகளாக வாழ்வுரிமை பறிக்கப்பட்ட 29 பேர் 12 விதமான போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருக்கின்றனர். அகதிகளின் அணியை சேர்ந்த அப்துல்லா சேதிக் என்பவர் தேக்வாண்டாவில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றிருந்த சீனாவை சேர்ந்த சாவோ சூயாயிடம் 22-20 என போராடி தோற்றார். 24 வயதாகும் இவரின் வாழ்வு முழுவதுமே போராட்டமாகத்தான் இருந்ததால் எந்த நொடியிலும் விட்டுக்கொடுத்துவிடாத மனவலிமை இவரிடம் வெளிப்பட்டிருந்தது. ஆஃப்கானிஸ்தானின் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இவர் அங்கிருந்து தப்பித்து, தினசரி 12 மணி நேரம் நடந்தே பல எல்லைகளை கடந்து பெல்ஜியத்தை அடைந்திருக்கிறார். நாடற்று அங்கீகாரமற்று இருந்தாலும் சிறு வயதிலிருந்தே பழகிய தேக்வாண்டோவில் சாதிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் அவரிடம் எஞ்சியிருந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்தே பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். சரியான நேரத்தில் ஒலிம்பிக் அமைப்பு அவரை கண்டெடுத்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு இவருடை அம்மா கொரோனா காரணமாக மரணித்திருந்தார், அந்த இறப்பிற்கு கூட செல்ல முடியாமல் தவித்தவர் அதையெல்லாம் கடந்து வந்தே டோக்கியோ ஒலிம்பிக்கில் கால்பதித்து அகதிகளின் பெருமையாக உயர்ந்திருக்கிறார். 'அகதியாக இருப்பதால் யாருடைய முகத்தை பார்த்து பேசும் துணிச்சலே எனக்கு இருக்காது. ஆனால், நான் எப்போது துப்பாக்கிச்சுடுதலில் ஈடுபட ஆரம்பித்த பிறகு அது எனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இப்போது யாரை பார்த்தாலும் நேருக்கு நேராக கண்களை பார்த்து பேசுகிறேன்' எனக்கூறும் லூனா சாலமன் சுவிட்சர்லாந்தில் குடியேறியிருக்கும் எரித்ரியா நாட்டை சேர்ந்த பெண். ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கப்பதக்கத்தை வென்றிருக்கும் நிக்கோலா கேம்ப்ரியனி அவருடைய ஓய்வுக்குப் பிறகு, அகதிகளுக்கு பயிற்சியளிக்க விரும்பினார். அவரின் மூலம் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி பெற்று இன்று ஒலிம்பிக் வரை வந்திருக்கிறார் லூனா. 'அகதிகளின் மீதிருக்கும் பிம்பத்தை மாற்ற விரும்புகிறேன். ஒலிம்பிக்கின் மூலம் கிடைக்கும் விஷயங்களை அகதிகளின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப் போகிறேன்' என உறுதியாக கூறியிருக்கிறார் லூனா. சிரியாவிலிருந்து படகில் தப்பித்து ஒரு தீவில் கரையேறி 7 நாடுகளை கடந்து ஜெர்மனிக்கு சென்று இப்போது ஒலிம்பிக்கிற்கு வந்திருக்கிறார் யுஸ்ரா மார்டினி. தப்பித்து வந்த போது படகு பழுதாக பல சமயங்களில் நீச்சலடித்தப்படியே அதை சரி செய்த யுஸ்ரா இப்போது ஒலிம்பிக்கில் நீச்சல் போட இருக்கிறார். கிமியா அலிசெத் ரியோ ஒலிம்பிக்கில் ஈரான் சார்பில் பங்கேற்று அந்த நாட்டிற்கு வெண்கலம் வென்று கொடுத்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். கலாச்சாரம் என்ற பெயரில் பிற்போக்குத்தனமாக கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ஈரானிலிருந்து வெளியேறி அகதியாக ஜெர்மெனியில் குடியேறி இப்போது தேக்வாண்டோவில் பங்கேற்றிருந்தார். முதல் சுற்றிலேயே ஈரானுக்கு சுழன்றடித்து வென்று அந்த நாட்டிற்கு தக்க பதிலடி கொடுத்தார். கடைசி வரை போராடி நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காவது இடம் பிடித்திருக்கிறார். இப்படி அகதிகள் அணியின் சார்பில் பங்கேற்கும் 29 பேரின் பின்னாலும் பல வலிகள் ஒளிந்திருக்கிறது. பல நாடுகளினாலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் இரண்டாம் தர குடிக்களாக நடத்தப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கு அங்கீகாரமே அற்ற 'அகதிகள்' எனும் அடையாளம். ஆனால், இன்றைக்கு அப்படியில்லை உலக அரங்கில் தங்களை விரட்டியடித்தவர்களுடன் விடாப்பிடியாக சண்டையிட்டு தங்களுக்கான அடையாளத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒலிம்பிக்கை தொடர்ந்து நடைபெறும் பாரா ஒலிம்பிக்கிலும் முதல் முறையாக அகதிகளுக்கான அணி பங்கேற்க இருக்கிறது. அகதிகளால் பொருளாதார அளவில் முன்னேறிய நாடுகளே அதிகம் இருக்கின்றன. ஆனால், அதை நிறைய நாடுகள் உணர்ந்திருக்கவில்லை. ஃப்ரான்ஸ் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே அவர்களுக்கான கண்ணியத்தை உறுதி செய்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு 2018 இல் கால்பந்து உலகக்கோப்பையை வென்ற ஃப்ரான்ஸ் அணியில் க்ரீஸ்மேன், எம்பாப்பே, போக்பா, உம்டிட்டி, ஜிடேன் என அகதிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களே அதிகம் இருந்தனர். டென்மார்க்கின் பெண்கள் கால்பந்து அணியை தூக்கி நிறுத்தியிருக்கும் நாடியா நதீம் ஒரு ஆஃப்கானிய அகதி. அகதிகளே அந்த நாட்டின் பெருமையாக உயர்ந்திருக்கின்றனர். அகதிகளினால் அதிக பயன்களை அடையும் நாடுகள் அவர்களுக்கு கைமாறாக கொஞ்சமேனும் கண்ணியத்தையும் அங்கீகாரத்தையும் கொடுங்கள். ஒலிம்பிக் கொடுத்திருப்பதை போல! -உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முதல் உரை | கலைஞர் கருணாநிதி | Kalaignar96

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review