குத்தெல்லாம் எதிராளிக்கு இல்லை....இந்த சமூகத்துக்கு' இலக்கணங்கள் உடைத்த வரலாற்று நாயகி மேரிகோம்! #Tokyo2020 #Olympics #MaryKom

' What's your daily routine? இப்படி ஒரு கேள்வியை கிண்டர் ஹார்டன் குழந்தையிடம் கேட்டால் Wake up in the morning என தொடங்கி ஒரு பத்து வரிகளை ரைம்ஸ் போல ஒப்பித்து கடைசியில் Goes to bed என முடிக்கும். எந்த குழந்தையிடம் அந்த கேள்வியை கேட்டாலும் இதே ரைம்ஸ் போன்ற பதில்தான் வரும். ஒரு குழந்தையின் சராசரி நாளில் அப்படிப்பட்ட சராசரி விஷயங்கள் மட்டுமேதான் நடக்கிறது. அதனால், அப்படி ஒரே மாதிரி கூறுவதில் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், அதே குழந்தை வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகும் What's your daily routine? என கேட்டால் இதே Wake up in the morning தொடங்கி goes to bed வரை ரைமிங்காக படித்தால் எவ்வளவு மொக்கையாக இருக்கும்? ஆனால், இந்திய சமூகம் அதைத்தான் விரும்பும். எந்த பிரச்சனையும் இல்லாமல் சுவாரஸ்யமும் இல்லாமல் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்ந்துவிட்டு சென்றால் போதும். குறிப்பாக, பெண்களுக்கு அவர்களுக்கென்று இருக்கும் பாரம்பரிய டெம்ப்ளேட்டை விட்டு வெளியே வந்து தனித்தே தெரிந்துவிடக்கூடாது. எல்லாருக்கும் பொதுவாக கொடுக்கப்பட்டிருக்கும் சூத்திரத்தின் அடைப்புக்குறிக்குள்ளையே வாழ்க்கையை ஓட்டி முடித்துவிட வேண்டும். Wake up in the morning க்கும் goes to bed க்கும் இடையில் எந்த சுவாரஸ்யத்தையும் சவாலையும் எதிர்கொள்ளாத கிண்டர் ஹார்டன் குழந்தையாகவே ஒரு பெண் தன்னுடைய வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும். அதுதான் பெண்களுக்கென்று வகுக்கப்பட்டிருக்கும் இலக்கணம். ஆனால், இலக்கணங்கள் உடைக்கப்படும்போதே வரலாறுகள் பிறக்கின்றன. மேரி கோம் இந்திய சமூகத்தின் இலக்கணங்களை உடைத்த வரலாற்று நாயகி! பெண் ஒரு அடி முன் எடுத்து வைக்கும் போதே இதெல்லாம் எதுக்கு? என்கிற சமூகத்தின் கேள்விக்குறி கொண்டிருக்கும் கொக்கி அவர்களை பல படிகள் பின்னோக்கி சறுக்க வைத்த விடும். ஒரு பெண்ணாக...குத்துச்சண்டை வீராங்கனையாக மேரி கோமும் ஒவ்வொரு முறையும் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேற நினைக்கும் போதும், இப்படி பல கொக்கிகள் அவரை பிடித்து இழுத்து கீழே தள்ள நினைத்தன. மேரி கோம் எதிர்த்து ஆடுபவர்கள் மீது மட்டுமில்லை இதே மாதிரியான சமூக கொக்கிகள் மீதும்தான் குத்துவிட்டு அவற்றை சுக்கு நூறாக்கிக் கொண்டிருந்தார். 2012 இல்தான் ஒலிம்பிக்கிலேயே பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், 90களின் கடைசியிலிருந்தே கையில் க்ளவுஸை மாட்டிக் கொண்டு குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் மேரி கோம். அவருக்கு முன்னுதாரணமாக வீராங்கனைகள் என்று பெரிதாக யாருமே இல்லை. ஒரு சில வீரர்கள் மட்டுமே மேரி கோமிற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கின்றனர். நாம் எந்த இலக்கை நோக்கி முன்னேறுகிறோம் என்பதே தெரியாத மிரட்சிமிக்க பயணத்தையே மேற்கொண்டிருந்தார் மேரி கோம். யாரையும் பின் தொடர்ந்து சென்று கரை சேரவும் வழியில்லை. தானாகவே பாதைகளை போட்டுக் கொண்டு ஒவ்வொரு மைல்கல்லிலும் திடீர் ஆச்சர்யங்களையும்...தீடீர் அதிர்ச்சிகளையும் எதிர்கொண்டார். சொல்லப்போனால் இந்த அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும்தான் மேரிகோமின் வழித்துணைகளாக கூடவே பயணம் செய்து அவருக்கு ஊக்கமளித்தன. 2004-05 வாக்கிலேயே அவருக்கு திருமணம் முடிந்து விடுகிறது. ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு திருமணம் என்றால், சமூகம் வகுத்து வைத்திருக்கும் அடைப்புக்குறிகள் இன்னும் இருக்கமாக போகின்றன என்று அர்த்தம். பொறுப்புகள்...கடமைகள் என்ற பெயரில் நான்கு சுவற்றுக்குள்ளேயே முடக்கிவிட துடிக்கும். மேரி கோமுக்கும் இந்த சமூகம் அப்படியெல்லாம் செய்ய முற்பட்டது. திருமணத்திற்கு பிறகு 'இதெல்லாம் எதுக்கு' என கொக்கி போட்ட கேள்விகளுக்கு குத்துவிட முயன்றவருக்கு துணையாக ஒரு காலும் அந்த கேள்விகளை எட்டி உதைத்தது. அந்த கால்களுக்கு சொந்தக்காரர் ஆன்லர் கோம். மேரி கோமின் கணவர், கால்பந்தாட்ட வீரர்! திருமணத்திற்கு பிறகுதான் வரிசையாக உலக சாம்பியன் டைட்டில்களை வென்று அசத்தினார் மேரிகோம். 2005,2006,2008,2010 உலக சாம்பியன்ஷிப் டைட்டில்களை வென்று இந்திய குத்துச்சண்டையின் முகமாக மாற தொடங்கினார். மேரி கோம் கொடுத்த ஒவ்வொரு குத்தும் வென்ற ஒவ்வொரு டைட்டிலும் சமூகத்தின் பின்னிழுக்கும் பிற்போக்கு கொக்கிகளை மீண்டும் மீண்டும் உடைத்தன. திருமணத்திற்கு பிறகு இரண்டு உலக சாம்பியன்ஷிப்களை வென்றவர், குழந்தை பேறுக்கு பிறகு இன்னும் வேகமெடுத்தார். இரண்டு உலக சாம்பியன்ஷிப் டைட்டில்கள், மூன்று ஆசிய பதக்கங்கள் உச்சபட்சமாக 2012 ஒலிம்பிக் வெண்கலம் வென்ற போது மேரி கோம் மூன்று குழந்தைகளுக்கு தாய். ஒலிம்பிக் பதக்கத்தையே வென்ற பிறகு இனிமேலும் 'இதெல்லாம் எதுக்கு?' என்கிற கொக்கியை மேரி கோமிடம் வீச முடியுமா? ஆனால், அதற்காக இலக்கணங்களை உடைக்கும் பெண்ணை பின்னிழுக்காமல் விட முடியுமா? தன்னுடைய கேள்விகளுக்கு வேறொரு முகமூடியை போட்டுக் கொண்டது இந்திய சமூகம். மேரி கோம் அவ்வளவுதான். அவரின் குத்துச்சண்டை திறனெல்லாம் காலாவதியாகிவிட்டது. அவருக்கு வயதாகிவிட்டதென மேரி கோமுக்கே தன் மீது சந்தேகம் வருமளவுக்கு பல முனைகளிலிருந்தும் கொக்கிகளை வீசியது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் தேசிய கொடியை எந்த வேண்டியவர், அந்த ஒலிம்பிக்கிற்கு தகுதியே பெற முடியாமல் ஏமாற்றினார். இது போதாதா? மேரி கோமை இழுத்துப் போட உக்கிரமாக தாக்குதல் தொடுக்கப்பட்டது. செல்கின்ற இடமெல்லாம் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என கேள்விகள் துரத்தின. மேரி கோம் எதுவும் பேச விரும்பவில்லை. அவருக்கு அப்படி பேசியும் பழக்கமில்லை. எல்லாமே பன்ச்தான்! 2019 இல் ஒலிம்பிக் தகுதிச்சுற்றிற்கு 51 கிலோ எடைப்பிரிவில் தன்னை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என மேரி கோம் விரும்பினார். ஆனால், நிக்கத் ஷரின் எனும் இளம் வீராங்கனை மேரி கோமுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினார். அவருக்கு ஆதரவாக பல தரப்பும் பேசியது. இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று கொடுத்தவர் என்பதையெல்லாம் மறந்து மேரி கோமிற்கு எதிராக சாட்டையை சுழற்றினர். ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுக்க வேண்டும் என்ற இலக்கோடு வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மேரி கோமிற்கு இந்த சர்ச்சை ஆத்திரமூட்டியது. வேறு வழியின்றி நிக்கத் ஷரினுக்கும் மேரி கோமிற்கும் இடையே போட்டி வைக்கப்பட்டது. நிக்கத் ஷரினுக்கு வாய்ப்பே கொடுக்காமல் 9-1 என அடித்து நொறுக்கினார். அந்த போட்டியில் மேரி கோம் விட்ட குத்து ஒவ்வொன்றும் நிக்கத் ஷரினுக்கு கொடுக்கப்பட்டதல்ல இத்தனை நாளும் தன்னுடைய காலை பிடித்து பின்னுக்கு இழுக்க நினைத்த சமூகத்துக்கு கொடுக்க நினைத்தது. மேரி கோமின் குத்துகளிலிருந்த வெறி அதைத்தான் காட்டியது. போட்டி முடிந்த பிறகு நிக்கத் ஷரினுக்கு கைக்கொடுக்காமல் அவரை புறக்கணித்து விட்டு சென்றார். இதற்காக அப்போது விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜிஜூ வரை கடிதம் போட்டு கண்டனம் தெரிவித்தார் நிக்கத் ஷரின். ஆனால், மேரி கோமோ 'எதாவது பேச வேண்டுமானால் குத்துச்சண்டை ரிங்கிற்குள் வந்து பேசுங்கள். அவதூறாக பேச வேண்டியதெல்லாம் பேசி விட்டு கைக்கொடுக்கவில்லை என புகார் சொல்வது எந்த விதத்தில் நியாயம்' எனக் கூறினார். இதுதான் மேரிகோம். விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் அவரின் கைகள் மட்டுமே பதிலளிக்கும். இத்தனை ஆண்டுகளாக விமர்சித்தவர்களின் பிரதிநிதி போன்று நிக்கத் ஷரின் ரிங்குக்குள் வந்து நிற்க மொத்த வெறியையும் அவர் மீது காட்டிவிட்டார். நிக்கத்திற்கு போட்டியில் தோற்றதை விட மேரிகோம் கைக்கொடுக்காமல் போனதுதான் பெருத்த ஏமாற்றமாக மாறியது. புறக்கணிப்பு அதுதான் ஆகப்பெரும் வலி. தன்னை ஒரு சூத்திரத்தின் அடைப்புக்குறிக்குள் அடைக்க நினைக்கும் சமூகத்திற்கும் மேரி கோமின் பதில் அந்த புறக்கணிப்புதான். 'டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்' என உறுதியாக கூறியிருக்கிறார் மேரி கோம். ஆனால், அவரின் வயது, எதிராளியின் பலம் என பலவற்றையும் சுட்டிக்காட்டி மேரி கோம் பதக்கம் வெல்லவே வாய்ப்பில்லை என பலரும் கூறுகின்றனர். இளம் வீராங்கனைகளுக்கு வழங்கபட்டிருக்கிற வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துவிட்டார் என்றும் வசைகளும் வரிசைக்கட்ட தொடங்கியிருக்கிறது. விட்டுவிடாதீர்கள் இன்னும் விமர்சியுங்கள்...இன்னும் திட்டுங்கள்...ஏனெனில், அவர் எப்போதும் எதிராளிகளுக்கு குத்து விடுவதில்லை. உங்களை போன்ற வசையாளிகளுக்கே குத்துவிட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் வலுவாக விமர்சியுங்கள்....இன்னும் வலுவாக குத்து வாங்குங்கள்! -உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முதல் உரை | கலைஞர் கருணாநிதி | Kalaignar96

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review