மீராபாய் - வடகிழக்கின் பெருமை...தலைமுறைகளுக்கான இன்ஸ்பிரேஷன்! #Tokyo2020 #Olympics #MirabaiChanu

எதாவது ஒரு சம்பவத்தையோ எதாவது ஒரு நபரையோ இன்ஸ்பிரேஷனாக கொள்ளாதவர்கள் இங்கே மிகவும் குறைவு. தென்னை மட்டையை பேட்டாக மாற்றும் சிறுவனுக்கு சச்சின் இன்ஸ்பிரேஷனாக இருப்பது போல எல்லாருக்கும் இங்கே இன்ஸ்பிரேஷன்கள் இருக்கவே செய்கின்றனர். 26 வயதாகும் சாய்கோம் மீராபாய் ஜானுவுக்கும் அப்படியே! குஞ்சரணி தேவி எனும் இந்திய பளுதூக்கும் சூப்பர் வுமனே மீராபாயின் இன்ஸ்பிரேஷன். எப்படி இப்போது நடராஜனை இன்ஸ்பிரேஷனாக கொண்டு தமிழகத்தின் கிராமங்களிலிலிருந்து கிரிக்கெட்டை கரியராக மாற்றலாம் என்ற நம்பிக்கையோடு இளைஞர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படித்தான் வடகிழக்கு இந்தியாவிற்கு குஞ்சரணி தேவி. ஒரு தனித்தீவு போல அரசியலர்களின் பார்வையற்று எல்லாவிதத்திலும் பின்தங்கி போயிருந்த வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிறந்து அந்த பிராந்தியத்திற்கே பெரும் அடையாளமாக மாறியவர் குஞ்சரணி தேவி. பளுதூக்குதலில் உலக சாம்பியன்ஷிப்கள், ஆசிய போட்டிகள் போன்றவற்றில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தை தலைநிமிர வைத்தார். குஞ்சரணி தேவி ஒலிம்பிக்கில் ஆடியதில்லைதான் ஆனால் ஒலிம்பிக்கில் ஆடிய பல பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறார். இன்னமும் இருக்கிறார். அதற்கான சாட்சிதான் சாய்கோம் மீராபாய் ஜானு. மணிப்பூரின் இம்பாலில் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக கடைக்குட்டியாக பிறந்தவரே மீராபாய். சமையலுக்காக காட்டுப்பகுதிகளிலிருந்து விறகுகளை வெட்டி கொண்டு வரும்போது, தன்னுடைய மூத்த சகோதரர்களை விட அதிக விறகுகளை சுமந்து பெற்றோரை ஆச்சர்யப்படுத்தினார். இந்த திறனை முறையாக மடைமாற்றி விட விருப்பப்பட்ட பெற்றோர் மீராபாயை பளுதூக்கும் பயிற்சிகளில் ஈடுபடுத்தினர். 12 வயதிலிருந்தே பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கிய மீராபாயுக்கு குஞ்சரணி தேவியை இன்ஸ்பிரேஷன். குஞ்சரணி தேவியால் வெல்ல முடியாத ஒலிம்பிக் பதக்கத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே மீராபாயின் லட்சியம். மன உறுதியொடு தன்னுடைய லட்சியத்தை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்தார். 2014 ல் காமென்வெல்த் போட்டியில் தன்னுடைய 20 வயதிலேயே 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார். ரியோ ஒலிம்பிக்கில் எப்படியும் பதக்கம் வெல்வார் என்கிற நம்பிக்கை உருவாகியிருந்தது. ஆனால், அனைவருக்கும் ஏமாற்றமளிக்கும் வகையில் Do not Finish பட்டத்தை வாங்கி வந்தார். பதக்க கனவோடு ரியோவிற்கு சென்றவர் எடைப்பளுவை முழுமையாக தூக்கி முடிக்காமலே வெளியேறினார். ஒலிம்பிக் பதற்றமோ...அழுத்தமோ...கவனச்சிதறலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இந்த உலகம் காரணங்களுக்கு காது கொடுப்பதில்லையே! பெரும் எதிர்பார்ப்போடு ரியோவிற்கு சென்றவர் பெட்டி செய்தியாக கூட மாறாமல் இந்தியாவிற்கு திரும்பினார். மீண்டெழுதல் விளையாட்டு வீரர்களுக்கே வாய்க்கப் பெற்ற பிரத்யேக குணம். மீராபாயும் மீண்டெழுந்தார். 21 ஆம் நூற்றாண்டில் இந்தியர்கள் யாரும் செய்யாத சாதனையோடு. 2017 ல் அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். மொத்த மீடியாவின் கவனமும் விளையாட்டுலகின் கவனமும் மீண்டும் மீராபாய் மீது திரும்பியது. இந்த முறை மீண்டும் ஒரு தடங்கல். விளையாட்டு வீரர்கள் தவிர்க்கவே முடியாத காயத்தின் வடிவில். முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஒரு வருட தேக்கம் ஏற்பட்டது. ஒலிம்பிக் தோல்விக்கு பிறகு எழுந்ததை போலவே மீண்டும் நம்பிக்கையோடு எழுந்தார். 2019 உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டு நான்காவது இடம் பெற்றார். லாக்டவுணுக்கு பிறகு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ எடை பிரிவில் Clean & jerk ல் புதிய உலக ரெக்கார்டோடு வெண்கல பதக்கத்தை வென்று டோக்கியோ ஒலிம்பிக்கிற்கும் தகுதிப்பெற்றார். நாம் இன்ஸ்பிரேஷன்களாக வைத்திருப்பவர்களிடமிருந்து ஊக்கம், உந்துதல், தன்னம்பிக்கை என பலவற்றை பெறுகிறோம். அதற்கு கைமாறாக அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம்? நம்முடைய வெற்றிகள் மட்டுமே அவர்களுக்கான காணிக்கையாகிவிடாது. நம்முடைய இன்ஸ்பிரேஷன் கொடுத்த உந்துதல் எனும் பேட்டனை நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் கடத்திவிட வேண்டும். மீராபாய் ஜானு அதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறார். குஞ்சரணியிடமிருந்து அவர் பெற்ற இன்ஸ்பிரேஷன் பேட்டனை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விட்டுக்கொண்டிருக்கிறார். -உ.ஸ்ரீ

Comments

Popular posts from this blog

சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முதல் உரை | கலைஞர் கருணாநிதி | Kalaignar96

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review