35 நாட்களில் டாக்டர் ஆக வேண்டுமா?

Poster Stories முழுக்க முழுக்க இதற்காகவே அர்ப்பணித்துக் கொள்ள உங்களிடம் 35 நாட்கள் இருக்கிறதா? கேட்டதை மறுகேள்வி கேட்காமல் கொடுக்கும் அளவுக்கு பணம் இருக்கிறதா? எனில் 36 வது நாள் நீங்கள் டாக்டராகி விடலாம்! இன்றைய காலையில் இந்த போஸ்டர் கண்ணில் பட்டது. நீட் தேர்வை 35 நாட்களில் வெல்வதற்கான Crash Course ஐ நடத்துகிறார்களாம். அதற்காகத்தான் இந்த விளம்பரம். நீட் மட்டுமில்லை. தமிழக அரசின் க்ரூப் தேர்வுகள், சீருடைப் பணியாளர் தேர்வுகள், மத்திய அரசின் SSC, வங்கிப்பணியாளர் தேர்வுகள் என அத்தனை போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கும் இப்படியான 'Crash Course' போஸ்டர்களை இப்போது அதிகம் பார்க்க முடிகிறது. 35 நாட்களில் ஒருவரை டாக்டராகவோ போலீஸ் ஆஃபிசராகவோ ஐ.ஏ.எஸ் ஆகவோ எப்படியய்யா மாற்ற முடியும்? வெறுமென மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி பாட முறையையும் தேர்வுகளையும் குறை சொல்கிறோம். அதே விஷயத்தைத்தானே வேலை வாங்கித் தருகிறோம் என பயிற்சி நிறுவனங்களும் இங்கே செய்கின்றன? அரசு வேலைகளின் அடிப்படைகளையும் தார்மீகங்களையும் உணராமல் வெறும் ப்ளாஸ்டீக் பொம்மைகளாக 35 நாட்களில் பாஸாகி என்ன பிரயோஜனம்? தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரை பற்றி பேனர்களோ விளம்பரங்களோ செய்யக்கூடாதென அரசு சொல்கிறது. ஆனால், தனியார் பயிற்சி மையங்களுக்கு அப்படி எதுவும் கட்டுப்பாடு இருக்கிறதா? ஒவ்வொரு அரசு போட்டி/நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் போதும் இவர்களை நாங்கள்தான் தேர்ச்சியடைய வைத்தோம் என மார்தட்டிக் கொண்டு விளம்பரங்கள் செய்கிறார்கள். கூடுதல் சுவாரஸ்யம் என்னவெனில், தங்கள் மையத்திலேயே படிக்காத மாணவர்களை கூட தேர்ச்சி பெற்ற பிறகு தங்கள் மையத்தில்தான் படித்தார் என பொய்யாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்யும் கூத்துகளும் அரங்கேறுகின்றன. ஆன்லைன் பயிற்சி மையங்கள் இன்னும் இறங்கி அடிக்கிறார்கள். அது ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கல்வி மையம். இந்தியாவில் இன்றைய தேதிக்கு ஆன்லைன் கல்வி என்றால் அவர்களுடைய பெயரும் விளம்பரங்களும்தான் முதலில் ஞாபகம் வரும். நானும் சில தேர்வுகளுக்கு முயன்று கொண்டிருப்பதால் முன்பொரு நாள் அவர்களின் ஆப்பை (App) பதிவிறக்கம் செய்து என்னுடை தொலைபேசி மற்றும் இ-மெயில் விபரங்களை கொடுத்து லாங் இன் ஆகியிருந்தேன். இந்த விபரங்களை வைத்துக் கொண்டு தொடர்ச்சியாக இந்த ஆஃபர், அந்த ஆஃபர், உங்களுக்கே உங்களுக்காக பிரத்யேகமாக இவ்வளவு சலுகைகளை அளிக்கிறோம் என தினமும் ஒரு 10 மெயிலாவது வந்துவிடும். மெயிலாக அனுப்பி ஓய்ந்தவர்கள், ஒரு கட்டத்தில் தொலைபேசி மூலம் வர ஆரம்பித்தார்கள். தொலைபேசியில் எவ்வளவு பொறுமையாக மென்மையாக பேச முடியுமோ பேசுகிறார்கள். நாம் தவிர்க்க நினைத்தாலும் உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறது? எனக் கேட்டு மீண்டும் அழைப்பார்கள். நாம் ரெஸ்பான்ஸ் செய்யாவிடில் சில நாட்கள் விட்டு விட்டு மீண்டும் அழைப்பார்கள். அதே பொறுமை, அதே மென்மை. நம்மிடம் முதலில் பேசிய அதே நபர்தான் தொடர்ச்சியாக நம்மை பின்தொடர்கிறார். ஒரு முறை சட்டென துண்டிக்க மனமில்லாமல், அவர்களுக்கு காது கொடுத்தேன். 'எங்கள் நிறுவனத்தில் நாங்கள் சிலரை மட்டும் Shortlist செய்து சிறப்பு கட்டண சலுகைகளை அளிக்கிறோம். அதில், நீங்களும் Shortlist ஆகியிருக்கிறீர்கள்' என ஒரு தகவலை அந்த நபர் சொன்னார். Shortlist ஆகும் அளவுக்கு நாம் ஒன்றும் செய்யவே இல்லையே என உறுத்த, எந்த அடிப்படையில் நீங்கள் என்னை Shortlist செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு, 'எங்களின் ஆப்பில் (App) இல் நீங்கள் தொடர்ச்சியாக சீராக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். அதனடிப்படையில்தான் உங்களை தேர்வு செய்தோம்' என்றார். கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், அந்த ஆப்பை நான் பதிவிறக்கம் செய்து முதல் நாள் லாக்-இன் ஆகி உள்ளே உலாவி பார்த்ததோடு சரி, பின்னர் அந்தப்பக்கம் நான் சென்றதே இல்லை. அவர்கள்தான் சீராக எனக்கு மெசேஜ்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதை கூட நான் கண்டுக்கொள்ள மாட்டேன். இதுதான் உண்மை நிலவரம். இருந்தாலும் 'ஓஹோ அப்படியா....சரி நான் இப்போது உங்கள் மையத்தில் சேர வேண்டுமெனில் எனக்கான பிரத்யேக சலுகைகளெல்லாம் போக எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?' எனக் கேட்டேன். அதற்கான சரியான பதில் கடைசி வரை கிடைக்கவில்லை. யாருக்குமே கிடைக்காது என நினைக்கிறேன். 'உங்களுக்கு ஓகே என்றால் சொல்லுங்கள். நாங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகிறோம். அந்த நேரத்தில் எங்களுடைய மேலதிகாரி Zoom காலில் வந்து உங்களுடன் ஒரு one on one session ஐ நடத்தி கட்டணம் பற்றியெல்லாம் விளக்குவார்' எனக்கூறினார். இப்போது அழைப்பை துண்டிக்கும் எண்ணம் எனக்கு வந்துவிட்டது. நன்றி கூறி அணைத்துவிட்டேன். இன்னமும் அங்கிருந்து அழைப்புகள் வருகிறது. முடிந்தளவு தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். ஆன்லைன் பயிற்சி மையங்கள் இப்படித்தான் வலை விரிக்கின்றன. மூளைச்சலவை செய்ய அயராமல் உழைக்கிறார்கள். தயக்கமேயின்றி பொய்களை அள்ளிவிடுகிறார்கள். ஒரு வழிகாட்டுதலுக்காக பயிற்சி மையங்கள் கட்டாயம் தேவை. அதேநேரத்தில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விதிக்கப்பட்டிருப்பதை ஒத்த கட்டுப்பாடுகளும் பயிற்சி மையங்களுக்கு தேவை. ஆன்லைன் பயிற்சி மையங்களும் புற்றீசல் போல பெருக தொடங்கியிருக்கும் இச்சூழலில் அரசு இப்போதேனும் இவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். -உ.ஸ்ரீ #posters #stories #exams

Comments

Popular posts from this blog

சட்டமன்றத்தில் கலைஞர் ஆற்றிய முதல் உரை | கலைஞர் கருணாநிதி | Kalaignar96

கடன் வாங்கிக்கொண்டு தப்பியவர்கள் - வாராக்கடன்

NGK - My Views | என்.ஜீ.கே | #NGK #Review